உயிரிழப்பு 5000ஐ கடந்து வேகமாக அதிகரிப்பு: 3ஆவது பூகம்பமும் பதிவு

துருக்கி, சிரிய பூகம்பம்:

உறையும் குளிர், கடும் மழையால் மீட்பு பணியில் சிரமம்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ தாண்டி இருக்கும் நிலையில் நேற்று (07) அங்கு மூன்றாவது சக்திவாய்ந்த பூகம்பம் ஒன்று பதிவாகியுள்ளது.

முன்னதாக ஏற்பட்ட பூகம்பங்களில் பல நகரங்களிலும் பெரும் அழிவுகள் பதிவாகி இருப்பதோடு இடிபாடுகளில் பலரும் சிக்கி இருப்பதாக அஞ்சப்படும் நிலையில் உறையும் குளிர் மற்றும் கடும் மழைக்கு மத்தியில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் மத்திய துருக்கியில் 1.2 மைல் ஆழத்தில் 5.8 ரிக்டர் அளவில் மற்றொரு பூகம்பம் பதிவானதாக ஐரோப்பிய மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

துருக்கியில் மாத்திரம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4000ஐ நெருங்கும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. இதன்படி உயிரிழப்பு 20,000ஐ தண்டலாம் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பூகம்பத்தை அடுத்து துருக்கியில் ஏழு நாள் துக்கதினம் அறிவிக்கப்பட்டிருப்பதோடு ஐக்கிய நாடுகள் சபையிடம் சிரியா உதவிகளை கோரியுள்ளது.

குளிர்காலப் புயல் காரணமாக கிட்டத்தட்ட உறையும் காலநிலை காணப்படுவதால் மீட்புப் பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது கட்டட இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை காப்பாற்றுவதை விரைவுபடுத்த வேண்டிய நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதில் மோசமாகப் பதிக்கப்பட்டிருக்கும் துருக்கி நகரான ஹடாய் குடியிருப்பாளர்கள் நிர்க்கதியான நிலையில் காணப்படுகின்றனர். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களின் அலறல் குரல்கள் அங்கங்கே கேட்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சிக்கி இருப்பவர்களை காப்பாற்றுவதற்கு மீட்பாளர்கள் வெறுங் கைகளால் இடிபாடுகளை தோண்டி வருகின்றனர்.

இதேநேரம் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்த நிலையில் கார்கள் மற்றும் வெளிப்புறங்களில் இரவை கழுத்து வருகின்றனர். துருக்கி மற்றும் சிரிய எல்லைகளில் ஆயிரக்கணக்காக கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் தற்காலிக முகாம்களை தேடி வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17க்கு மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்திலேயே 7.8 ரிக்டர் அளவான சுமார் 11 மைல் ஆழத்தில் பூகம்பம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது.

அதிக சக்திவாய்ந்ததாக இருந்த முதல் பூகம்பம் தொலைதூரத்தில் இருக்கும் கிரீன்லாந்திலும் உணரப்பட்டது. இதனை அடுத்து சிறிய அளவான அதிர்வுகள் பதிவாகி வந்த நிலையில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நேரத்தில் 12 மணி நேரம் கழித்து 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது பூகம்பமும் பதிவானது. இந்நிலையிலேயே நேற்று மூன்றாவது பூகம்பமும் பதிவானது.

துருக்கி நேரப்படி நேற்று காலை வரை அந்நாட்டில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,419 ஆக அதிகரித்திருந்தது என துருக்கி அனர்த்த மற்றும் அவசர முகாமை நிர்வாகம் தெரிவித்தது.

சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,600ஐ தாண்டி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை இடம்பெற்ற அதிர்வில் தரைமட்டமாக்கப்பட்ட 4,758 கட்டடங்களில் இருந்து சுமார் 8,000 பேர் மீட்கப்பட்டதாக துருக்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 13,740 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். தவிர, 41,000க்கும் அதிகமான கூடாரங்கள், 100,000 படுக்கைகள் மற்றும் 300,000 போர்வைகள் பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அது கூறியது.

இந்த பேரழிவுகளை அடுத்து உக்ரைன் தொடக்கம் நியூசிலாந்து வரை பல நாடுகள் உதவிக்கு முன்வந்துள்ளன. உதவிக்கான அழைப்பை அடுத்து பல்வேறு சர்வதேச மீட்பு குழுக்கள் துருக்கி மற்றும் சிரியாவை நோக்கி விரைந்துள்ளன.

அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடிகளை சர்வதேச உதவியால் மாத்திரமே சமாளிக்க முடியுமாக உள்ளது. எனினும் குளிர்கால புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகள் பனியால் மூடப்பட்டிருப்பதோடு மூன்று பிரதான விமானநிலையங்கள் இயங்க முடியாத அளவு சேதமடைந்துள்ளன.

இந்த சூழல் உதவிகளை விநியோகிப்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு சிரியாவின் நிலைமை இதனை விடவும் மோசமாக உள்ளது. குறிப்பாக கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரச படைகளின் முன்னரங்குகளை தாண்டி உதவிகளை எடுத்துச் செல்வதில் சிரமம் உள்ளது.

பூகம்பம் தாக்கிய வடக்கு சிரியாவில் பெரும்பகுதி ஏற்கனவே ஒரு தசாப்தத்திற்கு மேல் நீடிக்கும் உள்நாட்டு போரினால் பேரழிவை எதிர்கொண்ட பகுதிகளாக உள்ளன. அங்கு சிரிய மற்றும் ரஷ்ய படைகளின் வான் தாக்குதல்களால் வீடுகள், மருத்துவமனைகள் அழிவடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

கட்டட இடிபாடுகளில் சிக்கியோரை காப்பாற்றுவதற்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் மீட்பாளர்கள் இடிபாடுகளை வெறுங்கையால் தோண்டி வந்தனர். கதாயாவில் இடிந்த கட்டடத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட எழு வயது சிறுமி, “எனது தாய் எங்கே?” என்று கேட்டு அழுவதை காண முடிந்தது.

பூகம்பத்தின் மையப்பகுதியாக இருக்கும் கஹ்ரமன்மராஸ் மற்றும் காசியன்டெப் நகரங்களுக்கு இடையிலான பகுதி பெரும் அழிவை சந்தித்துள்ளது. இங்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடிந்த கட்டடங்கள் மற்றும் பனிப்பொழிவுக்கு மத்தியில் சிக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் சிறு சிறு அதிர்வுகள் பதிவாகி வரும் நிலையில் உயிர்தப்பிய மக்கள் பெரும் அச்சத்துடன் வீடுகளில் தங்காமல் வெளிப்பகுதிகளில் இரவை கழிக்கின்றனர்.

துருக்கியின் தெற்கு மாகாணமான ஹடாயாவில் கட்டட இடிபாடுகளுக்குள் இருக்கு பெண் ஒருவரில் உதவிக் குரல் கேட்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “அவர்கள் சத்தம் எழுப்புகிறார்கள், ஆனால் யாரும் வருவதில்லை” என்று டெனிஸ் என்ற குடியிருப்பாளர் ஒருவர் அழுதபடி கூறினார்.

ஜண்டைரிஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தன் குடும்பத்தினர் 12 பேர் இந்த பூகம்பத்தில் உயிரிழந்ததாக, ஏ.எப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்தார். தன்னுடைய குடும்பத்தினர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்பதாக, மற்றொரு நபர் தெரிவித்தார்.

“அவர்களின் குரல் கேட்கிறது. அவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள். ஆனால், காப்பாற்ற யாரும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

சர்வதேச உதவிக்காக வேண்டுகோள் விடுத்த நிலையில், 45 நாடுகள் உதவி செய்ய முன்வந்துள்ளதாக, துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்துவான் தெரிவித்தார்.

துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளது. மேலும், நெதர்லாந்து மற்றும் ரொமானியாவை சேர்ந்த மீட்புக்குழுவினர் துருக்கிக்கு செல்கின்றனர். 76 பேர் அடங்கிய சிறப்புக்குழு, உபகரணங்கள், மீட்பு நாய்கள் உள்ளிட்டவற்றை அனுப்புவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் உதவி செய்வதாக அறிவித்துள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளுக்கும் உதவுவதாக அறிவித்துள்ளார். அவ்வாறே ஈரானும் தெரிவித்துள்ளது.

துருக்கி உலகின் அதிக இயக்கம் கொண்ட பூகம்ப வலயம் ஒன்றில் அமைந்துள்ளது. அங்கு 1999இல் இடம்பெற்ற பூகம்பத்தில் 17,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதோடு 1939 ஆம் ஆண்டு இடம்பெற்ற பூகம்பம் ஒன்றில் 33,000 பேர் பலியாகினர்.


Add new comment

Or log in with...