சிரியா மற்றும் துருக்கியில் பயங்கர பூகம்பம்: 2,500 இற்கும் அதிகமானோர் பலி

பல நகரங்களிலும் பெரும் அழிவு

சிரிய நாட்டு எல்லைக்கு அருகில் தென் கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம் ஒன்றில் 2,500 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மக்கள் உறக்கத்தில் இருந்தபோது இடம்பெற்ற இந்த பூகம்பத்தில் பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

காசியன்டெப் நகருக்கு அருகில் உள்ளுர் நேரப்படி நேற்று (06) அதிகாலை 4.17 மணி அளவில் 17.9 கிலோமீற்றர் ஆழத்தில் 7.8 ரிச்டர் அளவில் இந்த பூகம்பம் இடம்பெற்றதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

துருக்கியில் உயிரிழப்பு எண்ணிக்கை சுமார் 1,500 ஆக அதிகரித்திருப்பதாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி புவாத் ஒக்தாய் நேற்று பிற்பகல் குறிப்பிட்டிருந்தார். சிரியாவில் 900 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டலாம் என்று அஞ்சப்படுகிறது.

அலெப்போ, லடகியா, ஹமா மற்றும் டார்டுஸ் மாகாணங்களில் உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதாக சிரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் மணித்தியாலங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக உயரும் அச்சம் நிலவியது.

இந்த பூகம்பத்தின் மையப்புள்ளி கஹ்ரமன்மராஸ் மாகாணத்தின் பசர்சிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதில் 10 நகரங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு தெரிவித்துள்ளார்.

இதில் துருக்கியில் குறைந்தது 2,323 பேரும் சிரியாவில் குறைந்தது 639 பேரும் காயமடைந்திருப்பதாக பிந்திய செய்திகள் கூறகின்றன.

பூகம்ப அதிர்வு லெபனான், எகிப்து மற்றும் சைப்ரஸ் நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

7.4 ரிச்டர் அளவில் பதிவான முதல் அதிர்வு இடம்பெற்று சில விநாடிகளில் இரண்டாவது அதிர்வு பதிவானதாக துருக்கி நில அதிர்வு தொடர்பான நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பூகம்பம் “மிகப் பயங்கரமானதாகவும் அச்சுறுத்துவதாகவும் இருந்தது” என்று சிரியாவின் இத்லிப் நகரைச் சேர்ந்த அலா நாபி என்பவர் விபரித்துள்ளார். “நடு இரவில் விழித்தபோது ஒட்டுமொத்த கட்டடமும் அதிர்ந்து பயங்கரமாக இருந்ததோடு தப்பிப்பதற்கும் கடினமாக இருந்தது” என்று அவர் அல் ஜசீரா தொலைக்காட்சிக்குக் குறிப்பிட்டுள்ளார்.

கடுங் குளிருக்கு மத்தியில் குழந்தைகளுடன் மக்கள் வீதிகளுக்கு கத்தியபடி ஓட்டம் பிடித்ததை பார்க்க வேதனையாக இருந்தது. ஆனால் நாம் அனைத்து கட்டடங்களில் இருந்தும் வெளியேறி ஒரு பகுதியில் கூடினோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

பூகம்பத்தைத் தொடர்ந்து துருக்கியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

துருக்கி மற்றும் சிரியாவில் சேதங்கள் கடுமையாக உள்ளதால் அந்த நாடுகள் சர்வதேச உதவியை கோரியுள்ளன.

உலகில் அதிக இயக்கத்தில் உள்ள பூகம்ப வலையத்தில் துருக்கி உள்ளது. 1999 ஆம் ஆண்டு நாட்டின் வடமேற்கு பகுதியை தாக்கிய பயங்கர பூகம்பத்தில் 17,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

துருக்கி நாட்டின் பெரும் பகுதி அனடோலியன் டெக்டோனிக் தகடில் அமைந்துள்ளது. இது யுரேசியா மற்றும் ஆபிரிக்கா ஆகிய இரு பிரதான தகடுகளுக்கு இடையில் இருக்கும் தளம் என்பதோடு இங்கு சிறிதான ஆரேபிய தகடும் உள்ளது. இந்த இரு தகடுகளும் இடம்மாறும்போது துருக்கியில் அழுத்தம் ஏற்படுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் துருக்கியில் நில நடுக்கம் வழக்கமாக இடம்பெறுவதோடு 2022 இல் அந்நாட்டில் 22,000 இற்கும் அதிகமான அதிர்வுகள் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...