ஆசிய விளையாட்டுப் போட்டி: கொழும்பு துறைமுக நகரில் இன்று ‘பன் ரன்’ நிகழ்ச்சி

சீனாவின் ஹொங்சூ நகரில் இந்த ஆண்டு கடைசியில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியை ஒட்டி ‘பன் ரன்’ விளையாட்டு நிகழ்ச்சி இன்று (07) கொழும்பு துறைமுக நகரில் நடைபெறவுள்ளது.

கொழும்பு, ஒலிம்பிக் இல்லத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த நிகழ்வு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆசிய ஒலிம்பிக் கெளன்சில் பணிப்பாளர் நாயகம் ஹுஸைன் அல் முசல்லம் ஆதரவுடன் நடைபெறும் இந்த நிகழ்வில் 200 பாடசாலை மாணவர்கள் உட்பட 700க்கும் அதிகமானர்கள் பங்கேற்கும் விளையாட்டு, கலை மற்றும் சாகச நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

ஆசிய பிராந்தியம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூகத்தினரை ஒன்றிணைக்கும் வகையில் பிராந்தியம் முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே இந்த நிகழ்வு இடம்பெறுகிறது. முன்னதாக கடந்த பெப்ரவரி 04 ஆம் திகதி மாலைதீவில் நடைபெற்றதைத் தொடர்ந்தே இந்த ‘பன் ரன்’ நிகழ்ச்சி தற்போது இலங்கையில் நடைபெறுகிறது.

இன்று பிற்பகல் 2.30 ஆரம்பமாகும் நிகழ்ச்சிகளில், படகோட்டம், டைக்கொண்டோ, கரப்பந்தாட்ட கண்காட்சி, இசை, நடனம் மற்றும் இலங்கை சண்டைக் கலையான அங்கம்பொர நிகழ்வும் இடம்பெறவுள்ளன.

கொரோனா தொற்றினால் பிற்போடப்பட்ட ஆசிய விளையாட்டுப் போட்டி வரும் செப்டெம்பர் 23 தொடக்கம் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

(படம்: ரஞ்சித் அசங்க)


Add new comment

Or log in with...