தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
பெலவத்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தமது வீட்டின் நீச்சல் தடாகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள கோடீஸ்வர வர்த்தகரான ரொஹன் வன்னிநாயக்கவின் மரண பரிசோதனை நேற்று இடம்பெற்றுள்ளதுடன் நீதிமன்ற மருத்துவ அதிகாரியினால் நேற்று மரண பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் DNA பரிசோதனை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மரண பரிசோதனையை கடந்த வௌ்ளிக்கிழமை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் அவரது சடலம் நீரில் மூழ்கி உருவம் சீர்குலைந்து காணப்பட்டதால் அவரது உறவினர்களால் அவரை உடனடியாக அடையாளம் காண முடியாத நிலையிலேயே நேற்றைய தினத்திற்கு மரண பரிசோதனை ஒத்திப்போடப்பட்டது.
இந்த படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 27 வயதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவியான 23 வயதுடைய யுவதியொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் நாரஹேன்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென்றும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் நாட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக இதற்கு முன்னர் சந்தேகம் எழுந்திருந்த நிலையில் அவர்களின் அந்த முயற்சி பயனற்றுப் போனதாக பின்னர் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் கடுவலை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இருவரையும் இரண்டு தினங்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள தடுத்துவைத்து விசாரிக்கும் உத்தரவை பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment