செப்டெம்பர் வரை அவகாசம் வழங்கியுள்ள பங்களாதேஷ்

பங்களாதேஷ் அரசாங்கம் இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ள கடனை மீளப் பெற்றுக் கொள்வதற்கு செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அப்துல் மோமென் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 75ஆவது சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்பதற்கான இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும்

சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதனையடுத்து

ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்திருந்த போதே மேற்படி காலஅவகாசம் தொடர்பான விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டான காலகட்டம் ஒன்றில் பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடனை மீள செலுத்துவதற்கான இறுதி கால அவகாசமாகவே இது அமையும் என்று அவர்

குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு நிதி மாற்ற நடவடிக்கையின் கீழ் 2021ம் ஆண்டு பங்களாதேஷ்

அரசாங்கம் 200 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு கடனாக

வழங்கியிருந்தது. அதற்காகவே மேலதிகமாக மேலும் 6 மாத கால அவகாசத்தை பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் ஒரு கால அவகாசத்தைப் பெற்றுத்தருமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே செப்டெம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பங்களதேஷ் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...