சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட விமான நிலையத்தில் கைது

- போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய வீடியோ; வாக்குமூலம் வழங்க தவறியதாக குற்றச்சாட்டு

சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துன்கொட நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலகத்தை தூண்டும் வகையிலான சர்ச்சைக்குரிய வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டமை தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வாக்குமூலம் வழங்குவதற்கு அழைக்கப்பட்ட போதிலும் அதனை வழங்க தவறிய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் இடம்பெற்ற போராட்ட வேளையில் கடந்த மே 09ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் இடம் பெற்ற அமைதியற்ற நிலைமையில் கலகத்தை தூண்டும் பதிலாக வீடியோவை வெளியிட்டதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணனிப் பிரிவு முன்னெடுத்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த மே 31 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான அவர் சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கி இருந்தார். அந்த வகையில் அவரிடம் ஜனவரி 20ஆம் திகதி மீண்டும் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் அங்கு சமூகமளிக்கவில்லை எனவும், அதன் அடிப்படையில் அவர் வெளிநாடு செல்வதற்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சிஐடியினர் தடை உத்தரவு ஒன்றை பெற்றிருந்தனர்.

ஆயினும் அவ்வேளையில் அவர் துபாய்க்கு சென்றிருந்ததாகவும் அங்கிருந்து நேற்றிரவு இலங்கை வந்தடைந்த நிலையில், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்ககளத்தின் கணனி பிரிவுக்கு அழைத்து வரப்பட்டதோடு, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து, அதன் பின்னர் அவர் அங்கிருந்து இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...