எதிர்வரும் மார்ச் மாதம் பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்கபந்து சர்வதேச கபடி போட்டிக்கான இலங்கை அணியின் தலைவராக, நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட வீரரும், நிந்தவூர் மதீனா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருமான அஸ்லம் சஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சஜாவின் தலைமையிலான அணி எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை, பங்களாதேஷில் நடைபெறும் பங்கபந்து சர்வதேச கபடிச் சுற்றுப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளது.
இதேவேளை இவ் அணியில், நிந்தவூரைச் சேர்ந்த மொஹமட் சபிஹான், மொஹமட் நப்றீஸ் ஆகிய இரு வீரர்களும் உள்வாங்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தவிர மட்டக்களப்பு – தன்னாமுனை புனித ஜோசப் விளையாட்டுக் கழகத்தின் ராசோ பென்சி மற்றும் மட்டக்களப்பு கிரீன் கலக்சி விளையாட்டுக் கழகத்தின் அமிர்தலிங்கம் மோகன்ராஜ் ஆகியோரும் இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொடரில் பங்களாதேஷ், இலங்கை, இங்கிலாந்து, கென்யா, நேபாளம், ஈராக் மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட 12 நாடுகள் பங்குபற்ற உள்ளன.
இலங்கை கபடி அணி:
அஸ்லம் சஜா (தலைவர்), அஷான் மிஹிரங்க (உப தலைவர்), துலான் மதுவன்த, பென்சி ராசோ, நிரூத பதிரன, அகில லக்ஷான், மஹீஷிக ஜயவிக்ரம, மொஹமட் நப்ரீஸ், மொஹமட் சபிஹான், உசித ஜயசிங்க, ஏ. மோகன்ராஜ், வசன்த இதுனில்.
நிந்தவூர் குறூப் நிருபர்
Add new comment