சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர்: வாகனம் நீர்கொழும்பில் மீட்பு

- கடனட்டை மூலம் விமான டிக்கெட், ரூ 5 இலட்சத்திற்கு கொள்வனவு
- தம்பதியினரை தேடும் பொலிஸார்

பத்தரமுல்லை, தலங்கம, பெலவத்த பகுதியில் அதிசொகுசு மாடி வீட்டில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திலிருந்து, வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், தலங்கம பொலிஸார்   மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில் இது கொலை என தெரியவந்துள்ளது.

குறித்த வர்த்தகர் பயன்பபடுத்திய கார் நீர்கொழும்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த காரை செலுத்தி வந்த தம்பதியினர் வௌிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த SHADES எனும் ஆடையகத்தின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர் ரொஷான் வன்னிநாயக்கவின் (50) சடலம் அவரது பெலவத்தை எம்.டி.எச். வீதியில்  உள்ள சொகுசு வீட்டின் 2ஆவது மாடியில் உள்ள நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டிருந்த வேளையில் நேற்று (02) கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது உடல் நிர்வாணமாக, அடையாளம் காண முடியாத அளவுக்கு வீங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நீச்சல் தடாகத்தின் அருகே ஏராளமான இரத்தக் கறைகள் இருப்பதால், இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் வர்த்தகர் தலையில் பலமாக தாக்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு நீச்சல் குளத்திற்கு இழுத்துச் சென்று போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வர்த்தகரின் உள்ளாடைகள் நீச்சல் தடாகத்திற்கு அருகில் காணப்பட்டதாகவும், அவர் இறக்கும் போது அவர் நிர்வாணமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நீச்சல் தடாகம் அமைந்துள்ள அதே இடத்தில் இரண்டு ஆணுறைகள் இருந்ததாகவும், அதில் ஆணுறை ஒன்று பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த வர்த்தகர் 50 வயதான திருமணமாகாதவர். இவர் வெல்லம்பிட்டிய கிட்டம்புவேவில் உள்ள 'வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட வீடு புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதுவரை அந்த வீட்டிற்கு குடிபுறவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கோடீஸ்வர வர்த்தகர் கடந்த 30ஆம் திகதி காணாமல் போயுள்ளார். இந்த வர்த்தகர் வெல்லம்பிட்டியவில் உள்ள தனது வீட்டிலிருந்து மாலை 5.30 மணியளவில் (KE 9998) என்ற தனது காரில் புறப்பட்டார். வர்த்தகரின் தங்கை இரவு 7.00 மணியளவில் அவருக்கு பலமுறை தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவு உணவு தயாரிப்பது தொடர்பாக அவர் அந்த அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்ப்படுகிறது. பின்னர், இரவு 7.29 மணியளவில் அவர் தனது தங்கைக்கு அழைப்பை மேற்கொண்டு, ஏன்  அழைத்ததாக கேட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

அந்த அழைப்பின் பின்னர், தனது சகோதரரின் கையடக்கத் தொலைபேசி செயலிழந்த நிலையில், அவரைக் காணவில்லை என அவரது தங்கையினால் வெல்லம்பிட்டி பொலிஸில் நேற்று முன்தினம் (01) முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, சந்தேகங்கத்தின் அடிப்படையில் தங்கை உள்ளிட்ட ஏனைய குடும்பத்தினர் பெலவத்தையில் உள்ள குறித்த வீட்டுக்குச் சென்று நேற்று (02) சோதனை செய்த போது சடலத்தை பார்த்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கொலைக்குப் பிறகு வர்த்தகரின் பணப்பையிலிருந்த 4 கடனட்டைகள் காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வர்த்தகர் காணாமல் போன பிறகு, அவரது ஒரு கடனட்டையை  பயன்படுத்தி 5 விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர் காணாமல் போனமை தொடர்பான முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட வெல்லம்பிட்டிய பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட போது, ​​இங்கிலாந்துக்கா 2 விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த வர்த்தகர் கொலைக்கு பிறகு இந்தோனேசியா செல்ல 5 விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், வர்த்தகர் கொலை செய்யப்பட்ட பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய வரிச்சலுகை வர்த்தக நிலையங்களில் (Duty Free Shop) ரூபா 5 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தகரின் கொலையில் பெண் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். பெலவத்தையில் உள்ள வீட்டில் இருந்த போது பெண்ணின் ஆதரவுடன் சிலரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸ் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

கொலை நடந்த வீட்டில் பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்படாததால், அருகில் உள்ள வீடுகள், கட்டடங்களில் உள்ள பாதுகாப்பு கெமரா காட்சிகள், வர்த்தகரின் கைத்தொலைபேசி ஆகியவற்றை ஆய்வு செய்து பெண்ணையும் கொலையாளியையும் அடையாளம் காணும் நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

அதை தொடர்ந்து வர்த்தகரின் குறித்த கார்  நீர்கொழும்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாகவும், காரை செலுத்தி வந்த தம்பதியினர் வௌிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இக்கொலை வர்த்தகர் காணாமல் போன கடந்த ஜனவரி 30ஆம் திகதி இரவே நடந்திருக்கலாமெனவும், சந்தேகநபர்கள் 31ஆம் திகதி நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான 5 விமானச் சீட்டுகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.


Add new comment

Or log in with...