இலங்கை பாகிஸ்தான் வர்த்தக சபை மற்றும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரிடையே சந்திப்பு

இலங்கை பாகிஸ்தான் வர்த்தக சபையின் தலைவர் தெய்வநாயகம் மற்றும் அதன் உறுப்பினர்கள் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடினர்.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக வர்த்தக சபையினால் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முன்முயற்சிகள் குறித்து உயர்ஸ்தானிகருக்கு இதன் போது விளக்கமளிக்கப்பட்டது. இது சம்பந்தமாக, பாகிஸ்தானில் உள்ள வணிக வாய்ப்புகளை கண்டறிய வர்த்தக சபை இவ்வருடம் மார்ச்  தொடக்கத்தில் பிரதிநிதிகள் குழு ஒன்றை பாகிஸ்தான் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் பின்னணியில் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது சம்பந்தமாக விரிவான கலந்துரையாடப்பட்டது. தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையில் இருந்து இறக்குமதியை இலகுபடுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை வர்த்தக சபை வரவேற்றது.

அனைத்துத் தரப்பு ஒத்துழைப்பிலும் இலங்கையுடனான தனது உறவுகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்று உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார். பாகிஸ்தான் தனது வர்த்தக, வணிக மற்றும் பொருளாதார உறவுகளை மென்மேலும் மேம்படுத்த விரும்புகின்ற மிக முக்கியமான பிராந்திய நாடாக இலங்கை கருதப்படுவதாக உயர்ஸ்தானிகர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய , வணிக விசா விண்ணப்பங்கள் 24-48 மணி நேரத்திற்குள் உயர் ஸ்தானிகராலயத்தால் முன்னுரிமை அடிப்படையில் வெளியிடப்படுகின்றன என்றும்  அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணைப்பாளர் திருமதி அஸ்மா கமால், பாகிஸ்தானில் வர்த்தக அமைச்சகம், பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் பாகிஸ்தானின் வர்த்தக மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு துறை சார்ந்த வர்த்தக கண்காட்சிகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளித்தார்.

இலங்கையின் இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களை பாகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நான்கு பாரிய வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.  அவையாவன : இன்ஜினியரிங் மற்றும் ஹெல்த்கேயர் கண்காட்சி (2023 பெப்ரவரி 23 - 25 வரை லாகூரில்), ICT துறைக்கான டெக் ஸ்பிரிங் பாகிஸ்தான் (16-18 மார்ச் 2023 லாகூரில்), சர்வதேச உணவு மற்றும் விவசாய கண்காட்சி (2023 மே 4-6 கராச்சியில் ) மற்றும் 4வது TeXpo எனப்படும் சர்வதேச புடவை கண்காட்சி (2023 மே 26-28 கராச்சியில்) நடைபெறும்.

இலங்கை பாகிஸ்தான் வர்த்தக சபையின் தலைமை மற்றும் உறுப்பினர்களுக்கு சாத்தியமான அனைத்து வகையிலும் ஆதரவளிப்பதற்கும், இருதரப்பு வர்த்தகம், கூட்டு முயற்சிகள் மற்றும் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு நெருக்கமாக தொடர்ந்து பணியாற்றுவதற்கும் உயர்ஸ்தானிகர் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலுப்படுத்தினார்.


Add new comment

Or log in with...