இறைவனின் பேரருளால், அவனது அருளைச் சுமந்து மனிதரிடையே மனித வடிவில் வந்துதித்த நபி(ஸல்) அவர்கள் சக மனிதர்களின் துன்பங்களை களைபவராக இருந்தார். இரக்கம் காட்டுபவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினார். மனிதர்களின் மன காயங்களுக்கு மருந்திடுபவராகவும், அவர்களின் துன்பங்களின் துயர் துடைப்பவராகவும், தவறிழைக்கும்போது அவர்கள் மீது அனுதாபங்கொண்டு அரவணைத்து நல்வழிப்படுத்துபவராகவும், செல்வந்தர்களைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்பவராகவும், பறிபோன உரிமைகளைப் பெற்றுத் தருபவராகவும், அதற்காக போராடும் போராளியாகவும் அவர் இருந்தார்.
நபி (ஸல்) அவர்களின் வாழ்வை அறிவு மற்றும் உண்மை என்னும் அழகான ஆபரணங்களால் அழகுப்படுத்தி வைத்தான் இறைவன். அவரது வாழ்க்கை ஒழுக்கத்தின் சிகரமாக விளங்கியது. அன்பாலும், இரக்கத்தாலும் நிரம்பி வழிந்தது. சக மனிதர்களின் துயரங்களைக் கண்டு உருகும் குணம் அவர்களுடையது.
இந்த அருங்குணங்களை முன்வைத்துதான் நபி (ஸல்) அவர்களால் மக்கள் மனங்களை வெல்ல முடிந்தது என்று அல் குர்ஆன் சாட்சியமளிக்கிறது.
'நபியே, இறைவனின் மாபெரும் அருளினாலேயே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும், வன்நெஞ்சராகவும் இருந்திருந்தால், இவர்கள் எல்லோரும் உம்மை விட்டு விலகிப்போய் இருப்பார்கள் (அல் குர்ஆன்)
இரக்கம் காட்டுதலே பிரதானம் என்பதை போதித்த நபி (ஸல்) அவர்கள், 'பூமியில் உள்ளோர் மீது இரக்கம் கொள்ளுங்கள். வானத்தில் இருப்பவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இரக்கம் காட்டுவது என்பது சக மனிதர்களிடம் மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாக சுட்டுகிறார்.
'இறைவன் பூமியையும், வானங்களையும் படைத்தபோது, அவன் நூறு கருணைகளையும் சேர்த்தே படைத்தான். அந்த ஒவ்வொரு கருணையின் விசாலமும், வானம் பூமி இவற்றுக்கு இடைப்பட்ட தூர அளவிலானது. இதன் ஒரு தன்மையைத்தான் அவன் பூமிக்கு அனுப்பி வைத்தான். அதனால்தான் ஒரு தாய் தன் குழந்தையிடம் பேரன்பு கொள்கிறாள். விலங்குகளும், பறவைகளும் தங்களுக்குள் இரக்கம் காட்டிக்கொள்கின்றன' என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆகவே அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொள்ளும் வகையில் சக மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்டுவதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வோம்.
Add new comment