போதைப்பொருள்: ஷைத்தானின் ஆயுதம்

உலகம் நாகரீகத்தின் உச்ச நிலையை எட்டிப்பிடித்திருக்கும் இந்நூற்றாண்டில் இவ்வையகம் பெற்ற, பெற்று வருகின்ற மாற்றங்கள் பல. விஞ்ஞான வினோதங்கள் ஆகாயத்தில் சாகசமிடும் அளவுக்கு உலகம் முன்னேறியுள்ளது. அந்த முன்னேற்றங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதன் விளைவாக உலகம் அழிவுப் பாதையை நோக்கி நகர்கின்றது. விஞ்ஞானத்தினால் நன்மைகள் ஏற்பட்டிருக்கின்ற அதே நேரத்தில் தீமைகளும் ஏற்பட்டுள்ளன. இத்தீமைகள் இன்று உலகளாவிய ரீதியில் பொதுவான பிரச்சினையாக வளர்ச்சி பெற்றுள்ளதோடு மனித சமூகத்தை ஆட்டிப்படைக்கவும் செய்கின்றன. இப்படிப்பட்ட தீமைகளுள் போதைப்பொருள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இப்பிரச்சினைக்கு இந்நாட்டில் எல்லா சமூகங்களும் முகம் கொடுத்துள்ளன.

பொழுதுபோக்கு, அற்ப சந்தோஷம் என ஆரம்பமாகும் போதைப்பொருள் பாவனையானது, உடல் நலத்திற்கு கேடுவிளைவித்து உயிரிழப்புக்கே வித்திடக்கூடியதும் சமூக சீர்கேடுகளுக்கு துணைபுரியக்கூடியதுமாக உள்ளது. அதனால் போதைப்பொருள் பாவனையில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். அதன் நிமித்தம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் அவசியத் தேவையாகும்.

போதைப்பொருளானது, இஸ்லாம் முற்றிலும் தடைசெய்துள்ள ஒன்று. அப்படி இருந்தும் இம்மார்க்கத்தைச் சேர்ந்தவர்களும் அதனைப் பயன்படுத்துவது கவலைக்குரியது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்கள் தம் உடலை மாத்திரமல்லாமல் தம் குடும்பத்தையும் பாதுகாக்க முடியாமல் இருக்கின்றனர். அதன் விளைவாக சிறுவர்கள் முதல் வளர்ந்தவர்கள், முதியவர்கள் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகி சீரழியும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் மனிதனின் தனிப்பட்ட மற்றும் சமூக ஆரோக்கிய நலன்களில் அதிக கவனம் செலுத்தும் இஸ்லாம் இப்படியானவற்றை தடை செய்திருக்கிறது.

அந்த வகையில் அல் குர்ஆன், 'நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டும் சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக்கொள்ள மாட்டீர்களா?' (05 : 91) என்று வினா எழுப்பி இருக்கிறது.

அதேநேரம் நபி (ஸல்) அவர்கள் 'போதைவஸ்துக்கு அடிமையாகாதீர்கள்' என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

அல் குர்ஆன் வினா எழுப்பியும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தும் கூட அவற்றைப் பொருட்படுத்தாமலேயே போதைப்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவர்கள் இப்பாவனை குறித்து மறுமையில் அல்லாஹ்விடம் பதிலளித்தாக வேண்டும். ஆன்மீக ரீதியிலும், ஆரோக்கிய ரீதியிலும் மனிதனுக்கு கெடுதல்களை ஏற்படுத்தும் இப்பாவனை, தனிமனிதனை மாத்திரமல்லாமல் சமூகத்தையும் அழிவுப்பாதையில் தள்ளிவிடக்கூடியதாக உள்ளது. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் போதைப்பொருள் பாவித்தவர்களைத் தண்டித்து சீர்திருத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். இது தொடர்பில் பல நபிமொழிகள் காணப்படுகின்றன. அதில் அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் இந்த இடத்தில் எடுத்துக்காட்டக்கூடியதாகும்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்களின் அவைக்கு மது அருந்திய ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டார். அப்போது நபியவர்கள், 'ஸஹாபாக்களை நோக்கி இவரை அடியுங்கள்' எனக் கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி)

இன்றைய காலகட்டத்தில் போதைப்பொருளின் கோரப்பிடியில் சிக்குண்டுள்ளவர்களின் கண்ணீர்க்கதையை அடிக்கடிக் கேட்கக்கூடியதாக உள்ளது. பாடசாலை மாணவர்களும் கூட போதைப்பொருளுக்கு அடிமையாகி படிப்பிழந்து, பண்பிழந்து காணப்படுகின்றனர். ஆனால் நாளையத் தலைவர்களாகவும் சமூகத்தின் முதுகெழும்பாகவும் திகழ வேண்டியவர்கள் அவர்கள். இவர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாக வீட்டுச்சூழலும் வாழும் சுற்றாடலும் பெரிதும் பங்களிக்கின்றன என்பதில் ஐயமில்லை. அதனால் ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளின் செயற்பாடுகளையும் நடத்தைகளையும் அவதானிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் போதை அரக்கனின் பிடிக்குள் சிக்குண்டு அப்பாவி பிஞ்சுகளும் கருகும் நிலைதான் ஏற்படும்.

ஆகவே இஸ்லாம் தடை போதைப்பொருட்களை முற்றாகத் தவிர்த்துக்கொள்வதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது தனிமனித வாழ்வுக்கும் குடும்ப மற்றும் சமூக வாழ்வுக்கும் கெடுதல்களை ஏற்படுத்தக்கூடிய போதை அரக்கனின் பிடியில் இருந்து பாதுகாப்பு

பெற்றுக்கொள்ளலாம்.

நாவின்ன பைஸல்...


Add new comment

Or log in with...