பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுவதே உடனடி தேவை!

உலக நாடுகளில் தோற்றம் பெற்ற கொவிட் 19 தொற்றின் விளைவாக இலங்கையும் பொருளாதார பாதிப்புகளுக்கு முகம் கொடுத்தது. கொவிட் காரணமாக நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு உத்தரவு மற்றும் முடக்க நிலைமையினால் உள்நாட்டுப் பொருளாதாரம் மோசமான நெருக்கடியை எதிர்கொண்டது. இது பொருளாதார வீழ்ச்சிக்கும் வித்திட்டது.

இந்நிலைமையானது இலங்கைக்கு மாத்திரம் உரியதன்று. கொவிட் 19 தொற்று காரணமாக உலகில் அத்தனை நாடுகளினதும் பொருளாதாரம் வீழ்ச்சிக்கு முகம்கொடுத்துள்ளது. இத்தொற்றின் பயங்கரம் தணிந்துள்ள போதிலும் அனைத்து நாடுகளும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுவதற்காகக் கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனாலும் பின்தங்கிப் போயுள்ள இப்பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதென்பது இலகுவான காரியமாகத் தோன்றவில்லை.

அந்த வகையில் இலங்கையும் பொருளாதார மீட்சிக்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. எமது நாட்டின் அந்நிய செலாவணி வருமானம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதன் விளைவாகவே இலங்கையில் டொலருக்கான பற்றாக்குறை ஏற்பட்டது. எரிபொருள் மற்றும் இறக்குமதிப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் டொலர் பற்றாக்குறை தடையாக அமைந்திருந்தது.

ஆனால் நாட்டின் உற்பத்தித்துறைக்கு எரிபொருள் மூலாதாரமாக விளங்குகின்றது. மின்சார உற்பத்திக்கும் எரிபொருளையே பெருமளவில் நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆகவே மின்சார உற்பத்தியிலும் எரிபொருள் தாக்கம் செலுத்துகிறது.

ஆன போதிலும் இந்நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடி தீவிர நிலையில் இருந்த சமயம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் உதவிகளை வழங்கின. அவற்றில் அயல்நாடு முதலில் என்ற கொள்கைக்கு அமைய இந்தியா அளித்துவரும் உதவி ஒத்துழைப்புக்கள் என்றும் மறக்க முடியாதவையாகும். இந்நாடு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் எல்லா சந்தர்ப்பங்களிலும் விரைந்து வந்து கைகொடுக்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது.

ஆனாலும் எமது நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு கொவிட் தொற்றை விட வேறு காரணங்கள் இல்லை என்பதை மக்கள் முதலில் உணர்ந்து கொள்வது அவசியம். அதனை விடுத்து எதிரணியினர் முன்வைக்கின்ற அபத்தமான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

எதிரணியினரின் குறிக்கோளானது நாட்டினதோ, மக்களினதோ நலன்களை நோக்கமாகக் கொண்டதல்ல. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தியபடி அரசுக்கு எதிராக மக்களை அணிதிரள வைப்பதே அவர்களின் மறைமுக நோக்கமாக இருக்கிறது. அவர்கள் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனரே தவிர, நாட்டின் பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை முன்வைப்பதாகத் தெரியவில்லை.

கொவிட் பெருந்தொற்றானது கடந்த இருவருட காலமாக முழு உலகையும் சீர்குலைத்திருப்பதை முற்றாக மறந்த நிலையில் எதிரணியினர் மேடைகளில் முழக்கமிட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை விரிவான அடிப்படையில் முன்னெடுத்துள்ளார். இதன் நிமித்தம் அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பை அவர் ஏற்கனவே கோரியுள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஓரணியில் நின்று நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கொவிட் தொற்றில் இருந்து எமது நாடு பெருமளவில் மீண்டு வந்துள்ளது என்பது வெளிப்படையான உண்மையாகும். தடுப்பூசி விடயத்தில் உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு இணையாக இலங்கையிலும் அவசரமானதும் ஆக்கபூர்வமானதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக எம்மால் கொவிட் தொற்றின் பயங்கரத்தில் இருந்து மீண்டெழ முடிந்தது. உலகின் மேற்கு நாடுகளில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே இலங்கையும் அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

இலங்கை மக்களுக்கு கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொடுக்க முன்னெடுக்கப்பட்ட அவசர நடவடிக்கைகளை சர்வதேசமே மெச்சிப் பாராட்டியது. இதன் நிமித்தம் ஆரம்பத்தில் இந்தியாவில் இருந்தும் அதனைத் தொடர்ந்து சீனா உட்பட பல நாடுகளில் இருந்தும் கொவிட் தடுப்பூசி விரைவாகப் பெற்றுக்கொள்ளப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன. அதன் பயனாகவே கொவிட் தொற்றின் கடுமையான அச்சுறுத்தலில் இருந்து இலங்கையால் மீளக்கூடியதாக இருந்தது. இல்லாவிடியில் இந்த அச்சுறுத்தல் இருந்து நாடு இன்னும் மீட்சி பெற்று இருக்காது.

நிலைமை இவ்வாறு இருக்கையில் கடந்த இரு வருட காலத்தில் நாம் கடந்து வந்த பாதையை முற்றாக மறந்த நிலையில் அர்த்தமற்ற விமர்சனங்களை முன்வைப்பது ஆரோக்கியமானது இல்லை.

பொருளாதார முயற்சிக்கான வழிகள் பற்றியே இப்போது நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. அரசியல் நோக்கம் கருதி எதிரணியினர் கூறுகின்ற பொருத்தமற்ற விமர்சனங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டியது அவசியம்.


Add new comment

Or log in with...