அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டவளை நகரத்தில் சீரற்ற காலநிலையின் போது வெள்ள அனர்த்தத்திற்குட்படும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் அண்மையில் வட்டவளை சிவசுப்பிரமணிய தேவஸ்தான கேட்போர் கூடத்தில் ஒன்றுகூடி தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.இதன் போது 'வட்டவளை சமூக அபிவிருத்தி நலன்புரிச் சங்கம்' என்ற அமைப்பொன்றை உருவாக்கியுள்ளனர்.
இதுவரை தங்களது பிரச்சினைக்குத் தீர்வு ஒன்று கிடைக்கவில்லை. இதனை கருத்திற் கொண்டு தமது சங்கத்தினூடாக பிரதேச செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பியிருந்தனர்.இருப்பினும் அங்கிருந்தும் தமது பிரச்சினைக்குத் தீர்வு ஒன்று கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு குறித்த சங்கத்தினூடாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.அவ்வாறு அனுப்பப்பட்ட கடித்திற்கு நுவரெலியா மாவட்ட செயலாளரிடத்திருந்து குறித்த சங்கத்திற்கு பதில் வழங்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி குறித்த பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்மின் உற்பத்திக்காக அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு காரணமாகவே இப்பிரதேசத்தில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த அணைக்கட்டு அமைந்துள்ள வான்கதவு முறையாக கவனிப்பாரற்ற நிலையிலும் பழுதடைந்தும் இருப்பது தெரியவந்துள்ளதோடு, குறித்த அணைக்கட்டு அமைந்த பகுதியில் காவலாளி மற்றும் மேலதிகநீர் வெளியேறும் வகையில் தொழிலாளி ஒருவரை அமர்த்துவதஞு பொருத்தமானது என்றும் மேற்குறித்த சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குறித்த பகுதியில் வெள்ளம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறு நீர்மின் உற்பத்திக்குப் பொறுப்பான தரப்புக்கு நுவரெலியா மாட்ட செயலாளரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதுகுறித்து இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்றும் அவர்கள் தெரிவித்தனர். வட்டவளை நகர பிரதேசத்தின் மகாவலி ஆற்றுக்கு இரு பக்கங்களிலும் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் திடீரென ஏற்படும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
2013ஆண்டுக்குப் பிறகே இவ்வாறான பாதிப்பினை சந்திப்பதாக இம்மக்கள் கூறுகின்றனர். இப்பிரச்சினைக்கு இதுவரை எவ்விதமான தீர்வினையும் பெற்றுத் தரப்படவில்லையெனவும் அம்மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து நகரத்தில் வாழும் மக்களது சங்கத்தின் செயலாளர் எம்.மோகனேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கும் போது "கோயில் பிரதேசத்தை அண்மித்த பகுதியில் சுமார் 47 குடும்பங்கள் வாழுகின்றன. ஒவ்வொரு வருடமும் மழைக்காலம் வரும் போது வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றோம். சுமார் 5 அல்லது 6 அடி வெள்ளம் வருகின்றது.இம்முறை அதிகாலை இரண்டு மணிக்கே வெள்ளம் வந்துவிட்டது. வெள்ளம் வரும் போது பொருட்களை எங்கு வைப்பது என்பது எங்களுக்குத் தெரியாது. இதனால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றோம்" என்று குறிப்பிட்டார்.
சங்க உறுப்பினர் ரகுமான் கருத்து தெரிவிக்கும் போது "கடந்த காலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோம். வெள்ளம் வரும் போது மாத்திரம் வான்கதவை திறந்து தருமாறுதான் கூறினோம். பல்வேறு காரணங்களை கூறுகின்றனர். நாங்களும் பல்வேறு தரப்பினர்களிடையே உதவி கேட்டுள்ளோம்" என்றார். மேற்படி பிரச்சினைக்கு உரிய தீர்வு ஒன்று பெற்றுத் தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
இரா. யோகேசன்...
(கினிகத்தேனை தினகரன் நிருபர்)
Add new comment