மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி தீர்மானம் மேற்கொள்வதன் அவசியம்

உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படுமா? என்ற ஐயம் நிலவி வந்த சூழலில் எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுமென வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாக இத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற ஐயம் நீங்கியுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன.

இத்தேர்தலின் நிமித்தம் கடந்த ஜனவரி 18 முதல் 21 வரை மாவட்ட மட்டத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதற்கேற்ப நாட்டிலுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான இத்தேர்தலில் 58 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுவதோடு 80 ஆயிரத்து 720 பேர் அபேட்சகர்களாகக் களமிறங்கியுள்ளனர்.

ஜனநாயகப் பாரம்பரியப்படி உரிய நேரகாலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

ஆனால் தேர்தலொன்றை நடத்துவதற்கு பெருந்தொகை நிதியைச் செலவிட நேரிடும். அவ்விதமான செலவுடன் தேர்தலொன்றை நடத்துவதற்கு ஏற்ற சூழலை நாடு இன்னும் அடைந்திருப்பதாகத் தெரியவில்லை.

கடந்த வருடம் மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம்கொடுத்தது. அந்நெருக்கடியினால் நாடும் மக்களும் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கும் பாதிப்புகளுக்கும் முகம்கொடுக்க வேண்டியேற்பட்டது. அந்நெருக்கடி கடந்த வருடம் மே முதல் ஜுலை வரையான காலப்பகுதியில் உச்சகட்டத்தை அடைந்திருந்தது.

இச்சூழலில் நாட்டின் தலைமைப் பதவியை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களின் பயனாக பொருளாதார நெருக்கடியின் தீவிர நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பொருளாதார நெருக்கடி தோற்றம் பெறுவதற்கு முன்னரான நிலையை நாடு இன்னும் அடைந்து கொள்ளவில்லை.

இவ்வாறான நிலையில் பெருந்தொகைச் செலவுடன் தேர்தலொன்றுக்கு செல்வதானது, பொருளாதார நெருக்கடியின் தீவிரநிலைக்கு மீண்டும் முகம்கொடுப்பதைத் தவிர்க்க முடியாது போய்விடும். அதுதான் பொருளாதார நிபுணர்களின் கருத்துமாகும்.

இன்றைய காலகட்டத்தில் தேர்தலொன்றை நடத்துவதாயின் அதற்கான ஒவ்வொரு ஏற்பாட்டுக்குமான செலவும் பொருளாதார நெருக்கடிக்கு முன்னரான காலத்தை விடவும் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு காகிதாதிகளுக்கு ஏற்பட்டுள்ள செலவினங்கள் நல்ல எடுத்துக்காட்டாகும். தேர்தல்களில் காகிதாதிகளின் பயன்பாடு மிக அதிகம். வாக்காளர் இடாப்பு, வாக்குச்சீட்டு உள்ளிட்ட பல தேவைகளுக்கும் காகிதாதி மிக அவசியம்.

இதேபோன்று தான் ஏனைய செலவினங்களும் அதிகரித்து காணப்படுகின்றன. அதனால் பொருளாதார நெருக்கடியில் இருந்து முழுமையாக மீட்சி பெறாத நிலையில் அதிக செலவு மிக்க காரியத்தில் ஈடுபடுவது நாட்டுக்கும் மக்களுக்கும் ஒருபோதும் நன்மையாக அமையாது. அது நாட்டையும் மக்களையும் மீண்டும் நெருக்கடிகளுக்குள் தள்ளிடவிடத் துணைபுரிவதாகவே அமையும்.

மேலும் நாடு முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடியானது தனித்து நின்று தீர்வு காணக்கூடிய ஒன்றுமல்ல. அதனால் கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் எல்லோரும் ஒன்றுபட்டு நாட்டையும் மக்களையும் இந்நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பது அவசியம்.

மக்களின் எதிர்பார்ப்பையும் உணர்வுகளையும் உரிய முறையில் புரிந்து கொள்ளத் தவறியுள்ள ஒரு சில அரசியல் கட்சிகள்தான் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென குறியாக இருக்கின்றன.

ஆனால் இத்தேர்தலை நடத்துவதால் நாட்டின் ஆட்சியில் மாற்றம் ஏற்படப் போவதுமில்லை. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கப் போவதுமில்லை. இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத சில கட்சிகள்தான் தேர்தலில் குறியாக இருக்கின்றன. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைக் கோரி வளமான வாழ்வையே மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். இதன்படி சில அரசியல் கட்சிகள் செயற்பாடுகள் மக்களின் தேவைக்கும் எதிர்பார்ப்புக்கும் முரணாகவே அமைந்துள்ளன. அதாவது தற்போதைய சூழலில் மக்கள் எதிர்பார்ப்பது ஒன்று. அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் மற்றொன்று. ஆனால் மக்கள் தற்போதைய சூழலில் மிகுந்த தெளிவுடன் உள்ளனர். தேர்தலைக் கோருபவர்களின் எதிர்பார்ப்பையும் மக்கள அறியாதவர்கள் அல்லர். அதனால் இக்கட்சிகளை நம்பி மீண்டுமொரு தடவை தீவிர பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட அவர்கள் ஒரு போதும் விரும்பவே மாட்டார்கள்.

ஆகவே பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கங்ளும் அழுத்தங்களும் நீடித்துக் கொண்டிருக்கும் சூழலில் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தியே தீர்மானங்களை எடுக்க வேண்டுமேயொழிய கட்சிகளின் அற்ப நலன்களை அடிப்படையாகக் கொண்டு அல்ல. அதுவே மக்களின் எதிர்பார்ப்பும் வேணவாவும் ஆகும்.


Add new comment

Or log in with...