காய்ச்சல் குறித்த கவனயீனம் ஆபத்துக்களை தேற்றுவிக்கலாம்

இலங்கையில் ஐந்து தசாப்த காலத்திற்கும் மேற்பட்ட வரலாற்றை டெங்கு வைரஸ் காய்ச்சல் கொண்டிருக்கிறது. இக்காலப்பகுதியில் நாட்டின் பெருந்தொகையானோரைப் பாதித்துள்ள இந்நோய், நூற்றுக்கணக்கானோரின் உயிர்களையும் காவு கொண்டுள்ளது.

இந்நோயானது ஆரம்பத்தில் கொழும்பின் சில பிரதேசங்களில் தான் அடையாளம் காணப்பட்டது. அது 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியாகும்.அதேபோல நாட்டின் வேறு எந்தப் பிரதேசத்திலும் இந்நோய்க்கான மூல காரணி காணப்படவில்லை. என்றாலும் அது மெதுமெதுவாக பரவலடைந்து இன்று முழு நாட்டிலும் பதிவாகக்கூடிய வகையில் வியாபித்துள்ள ஒரு நோயாக வளர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு இந்நோய் தாக்கத்துக்கு உள்ளாகும் நோயாளர்களின் அதிகரிப்பு நல்ல எடுத்துக்காட்டாகும்.

டெங்கானது ஆளுக்காள் தொற்றிப் பரவக்கூடிய நோயல்ல. ஆனால் மழைக் காலநிலையுடன் சேர்த்து அது பெரும்பாலும் தீவிரமடையக் கூடியதொரு நோயாக உள்ளது. மழை நீர் தேங்கும் இடங்களில் பல்கிப் பெருகும் நுளம்புகளால் தான் டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் காவிப் பரப்பப்படுகிறது. கைவிடப்பட்ட உடைந்த மட்பாண்டங்கள், யோகட் கப்புகள், சிரட்டைகள், பொலித்தீன் பைகள் உள்ளிட்ட மழை நீர் தேங்கும் இடங்களில் தான் இவ்வின நுளம்புகள் பெரும்பாலும் பல்கிப் பெருகும்.

இந்நுளம்புகள் காவிப்பரப்பும் டெங்கு வைரஸ் தோற்றுவிக்கும் நோய் மிகப் பயங்கரமானதும் உயிராபத்து மிக்கதுமாகும். என்றாலும் இந்நோயை இரண்டு விதமாக முகாமைத்துவம் செய்து கட்டுப்படுத்திக் கொள்ளலாம். அதன் ஊடாக இந்நோயின் பயங்கரத்தன்மையை முறியடித்து விடலாம்.

அதாவது டெங்கு வைரஸை காவிப் பரப்பும் நுளம்புகள் பெருக முடியாதபடி சுற்றாடலை சுத்தமாகவும் உலர்ந்த நிலையிலும் வைத்திருக்கும் போது மழைக் காலநிலையுடன் அவை பெருகாது. அதனால் சுற்றாடலில் மழை நீர் தேங்க முடியாதபடி திண்மக்கழிவுப் பொருட்களை ஒழுங்கு முறையாக அகற்றி சுற்றாடலை சுத்தமாகவும் உலர்ந்த நிலையிலும் வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

இல்லாவிடில் இந்நோய்க்கு உள்ளாகி இருப்பதை ஆரம்ப கட்டத்திலேயே இரத்தப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொண்டு உரிய சிகிச்சை பெற்றுக் கொள்வதன் மூலம் இந்நோயைக் குணப்படுத்திக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். அப்போது டெங்கு வைரஸ் காய்ச்சல் ஒரு அச்சுறுத்தலாக இருக்காது.

ஆனால் சுற்றாடல் சுத்தம் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் அசம்பந்தப் போக்கு மற்றும் கவனயீனங்களை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் இவ்வின நுளம்புகள் பல்கிப் பெருகி பெரும் அச்சுறுத்தலாக நீடித்து வருகின்றது. மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டால் டெங்கு ஒரு அச்சுறுத்தலாக இராது என்பது தான் மருத்துவர்களின் கருத்தாகும்.

இவை இவ்வாறிருக்க, நாட்டில் கடந்த சில வாரங்களாக ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் பதிவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நோய்களின் பிரதான அறிகுறியாகக் காய்ச்சல் காணப்படுகிறது. டெங்கு நோயின் பிரதான அறிகுறியும் காய்ச்சல் தான்.

ஆனாலும் இது சாதாரண காய்ச்சல், சளிக்காய்ச்சல் எனக்கருதும் மனப்பான்மை மக்கள் மத்தியில் காணப்படுகிறது. அதனால் இக்காய்ச்சலின் பாரதூரம் மற்றும் தாக்கங்கள் குறித்த கவனயீனம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இப்பின்னணியில் தற்போதைய சூழலில் காய்ச்சலுக்கு தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்வதில் அனேகர் கவனம் செலுத்துவதாக இல்லை. இவ்வாறானவர்கள் சாதாரண மாத்திரைகளை பாவித்து இக்காய்ச்சலைக் குணப்படுத்தி விடலாம் எனக் கருதுகின்றனர். இவ்வாறானவர்களில் பலர் மாத்திரைகள் பாவித்தும் காய்ச்சல் குணமடைவதற்கு பதிலாக நோய் தீவிர நிலையை அடைவதும் உயிராபத்து நிலைக்கு இட்டுச் செல்லப்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தான் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் சிலர், 'தற்போது நாட்டில் டெங்கு வைரஸ் காய்ச்சல் உள்ளிட் சில நோய்கள் பதிவாவதாகவும். இந்நோய்களுக்கு காய்ச்சல் பொதுவான அறிகுறியாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளதோடு இன்றைய காலகட்டத்தில் காய்ச்சல் காணப்படுமாயின் தகுதியான மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுள்ளனர்.

இது காலத்திற்கு அவசியமான ஆலோசனை. இவ்விடயத்தில் ஒவ்வொருவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காய்ச்சல் அறிகுறி குறித்து கவனயீனமாகவும் பொடுபோக்காகவும் நடந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்படுவது டெங்கு தீவிரமடையத் துணை போவதாகவே அமையும்.

ஆகவே டெங்கு வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட சில நோய்கள் பதிவாகும் தற்போதைய சூழலில் ஒவ்வொருவரும் தம் ஆரோக்கிய நலன்கள் குறித்து பொறுப்புடனும் முன்னவதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். அது இன்றியமையாததாகும்.


Add new comment

Or log in with...