காலி, தம்புள்ளை வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபையால் நடத்தப்படும் தேசிய சுப்பர் லீக் நான்கு நாள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இரண்டாவது வாரத்திற்கான போட்டிகளில் காலி மற்றும் தம்புள்ளை அணிகள் வெற்றியீட்டின.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்த இரு போட்டிகளில் கண்டி அணியை காலி 10 விக்கெட்டுகளால் இலகுவாக வீழ்த்தியதோடு தம்புள்ளை அணி ஜப்னா அணியை 05 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.

பாக்கியசோதி சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புலின தரங்க தலைமையிலான கண்டி அணி முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களை பெற்ற நிலையில் சங்கீத் குரேவின் சதத்தின் உதவியோடு ரமேஷ் மெண்டிஸ் தலைமையிலான காலி அணி தனது முதல் இன்னிங்ஸில் 365 ஓட்டங்களை பெற்றது.

எனினும் மொஹமட் ஷிராஸ் மற்றும் பிரவீன் ஜயவிக்ரம தலா 3 விக்கெட்டுகளை பதம்பார்க்க கண்டி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 198 ஓட்டங்களுக்கு சுருண்டது. தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட 129 ஓட்ட வெற்றி இலக்கை காலி அணி விக்கெட் இழப்பின்றி எட்டியது. முதல் இன்னிங்ஸில் சதம் பெற்ற சங்கீத் குரே ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களை பெற்றதோடு ஹஷான் துமிந்த ஆட்டமிக்காது 54 ஓட்டங்களை பெற்றார்.

காலி அணி முதல்வார போட்டியில் தம்புள்ளை அணியை வீழ்த்திய நிலையில் அந்த அணி தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேவேளை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நேற்று (29) நிறைவடைந்த போட்டியில் மினோத் பானுக்க தலைமையிலான தம்புள்ளை அணிக்கு, ஜப்னா 199 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து அந்த இலக்கு எட்டப்பட்டது. ஜப்னா அணி முதல் இன்னிங்ஸில் 62 ஓட்டங்களுக்கு சுருண்டபோது இரண்டாவது இன்னிங்ஸில் சுதாகரித்து ஆடி 349 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...