இலங்கையில் கொண்டாடப்பட்ட இந்தியாவின் 74ஆவது குடியரசு தின விழா

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இந்தியாவின் 74ஆவது குடியரசு தினத்தை இன்று (26) கொழும்பில் கொண்டாடியது.

கடந்த 1950 ஜனவரி 26ஆம் திகதியே இந்திய அரசியலமைப்பு-உலகின் மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது என்பது நினைவிருக்கலாம். உயரி அரசியலமைப்பானது இந்தியாவை இறையாண்மை, சோசலிசம், மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு என்று அறிவிக்கிறது. 2022 செப்டம்பரில் இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக ஆன பிறகு நடைபெறும் முதல் குடியரசு தின விழா இதுவாகும்.

IPKF நினைவிடத்தில், இந்திய அமைதி காக்கும் படையின் (IPKF) வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்தியாவின் தேசியக் கொடியை - இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் ஏற்றி, மரியாதை செலுத்தினார்.

இதன்போது இந்திய ஜனாதிபதியின் இந்திய குடியரசு தின உரையின் சில பகுதிகளையும் உயர் ஸ்தானிகர் வாசித்தார். இந்நிகழ்வில் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் விசேட காணொளிச் செய்தியும் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை கடற்படை இசைக்குழுவின் பாடல்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயத்தின் கலாச்சார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழாவில் இந்திய சமூகத்தினர் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (26) பிற்பகல் இந்தியா உயர் ஸ்தானிகராலயத்தில் ஒரு சம்பிரதாய வரவேற்பு ஏற்பாடு செய்யப்படவுள்ளதோடு, இந்நிகழ்வில் இலங்கையின் அனைத்து தரப்பையும் சேர்ந்த பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக, உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இலங்கையின் முதல் இருதரப்பு கடன் வழங்குனராக இந்தியா, விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்திற்காக IMF இற்கு எழுத்துப்பூர்வமாக நிதியளிப்பு உத்தரவாதங்களை வழங்கி 2 வாரங்களுக்குள் இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘அயல் நாட்டுக்கு முன்னுரிமை’ கொள்கைக்கு இணங்க இந்த ஆதரவு 2022 இல் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார, நிதி மற்றும் மனிதாபிமான ஆதரவின் தொடர்ச்சியாகும்.

மேலும், இந்த ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டங்கள் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடுகின்றன. மேலும், இரு நட்பு அண்டை நாடுகளும் இந்த ஆண்டு 75 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நிறுவுவதைக் கொண்டாடுகினறன.

அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகங்கள் மற்றும் கண்டியில் உள்ள உதவி உயர் ஸ்தானிகராலயம் ஆகியோனவும் பல்வேறு விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இந்தியாவின் 74ஆவது குடியரசு தினத்தை அனுசரித்தனர்.


Add new comment

Or log in with...