கம்பனிகள் மற்றும் சங்கங்கள் கட்டணங்களைத் திருத்துதல்; வர்த்தமானிக்கு அனுமதி

கம்பனிகள் மற்றும் சங்கங்கள் கட்டணங்களைத் திருத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் (வைத்திய கலாநிதி) ரமேஷ் பத்திரண தலைமையில் கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் அண்மையில் (20) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கமைய 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 477ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 527ஆம் பிரிவின் கீழ் மற்றும் 2005ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க சங்கங்கள் கட்டளைச் சட்டத்துடன் (திருத்தியமைக்கப்பட்ட) வாசிக்கப்பட வேண்டிய 1891ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் (123ஆம் அத்தியாயம்) 19ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட கட்டளைகளுக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2022 ஒக்டோபர் 25ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், இதன் ஊடாக 2016, ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதிய 1990/12ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பிரசுரிக்கப்பட்ட கம்பனிகள் மற்றும் சங்கங்களுக்கான கட்டணங்கள் திருத்தியமைக்கப்படவுள்ளன.

இது தவிர, மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் பல்வேறு தொழில்களை ஊக்குவிப்பது குறித்தும், புதிய தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காகத் தேவையான கடனுதவி வழங்குவது குறித்தும், கடன்கள் திறம்பட பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் குழுவில் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கயாஷான் நவனந்த மற்றும் ஜகத் குமார சமித்திராறாச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...