மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முன்மொழிவு குறித்து தேசிய பேரவையில் கலந்துரையாடல்

- இ.மி.ச. மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு ஜனவரி 24 அழைப்பு

மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட சில நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பணிப்பாளர் சபை மற்றும் அதிகாரிகளை தேசிய பேரவை அழைத்துக் கலந்துரையாடல் நடத்தியிருந்தது.

தேசிய பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களின் பங்குபற்றலுடன் நேற்று (19) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது.

அமைச்சரவையின் அனுமதியுடன் அண்மையில் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்சாரக் கட்டண அதிகரிப்புக் குறித்த முன்மொழிவு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விரைவில் முடிவொன்றை வழங்க வேண்டும் என மின்சார சபையின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினார்.

எனினும், முதலில் தேவையான கணக்கீடு பூர்த்திசெய்யப்பட வேண்டும் என இங்கு கருத்துத் தெரிவித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கலந்துரையாடி இறுதி முடிவை எடுக்க வேண்டும் என இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார். இவ்வாறு கலந்துரையாடலை நடத்தி எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் தேசிய பேரவைக்கு அழைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவின் இறுதி அறிக்கை வரைபையும் உபகுழுவின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக தேசிய பேரவையில் முன்வைத்தார்.

தேசிய பேரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான டிரான் அலஸ், கஞ்சன விஜேசேகர, நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர்களான டி.வி.சானக, (சட்டத்தரணி) சிசிர ஜயகொடி, இந்திக அநுருத்த, அநுராத ஜயரத்ன பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்டன் பெர்னாந்து, பாட்டலி சம்பிக்க ரணவக, ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க மற்றும் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...