ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவரது எம்.பி. பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
கொழும்பு தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹொமட் முஜிபர் ரஹூமான் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யும் கடிதத்தை தம்மிடம் கையளித்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
முஜிபர் ரஹூமான் அவர்களின் கடிதத்துக்கு அமைய பதவி விலகல் 2023 ஜனவரி 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
1981ஆம் ஆண்டு ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64 (1)ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இது பற்றி அறிவித்துள்ளார்.
இன்றையதினம் (20) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐ.ம.ச. கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவானவர்கள் பட்டியலில் அடுத்த இடத்திலுள்ள எம்.எச்.எம். பௌசி மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment