கோட்டாபய, மஹிந்த உள்ளிட்டோருக்கு கனடா தடை விதிப்பு

- இலங்கை அரசாங்கம் கனேடிய உயர் ஸ்தானிகராலயத்திடம் கண்டனம்

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ உறுப்பினர்களுக்கு எதிராக கனடா அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ பணிக்குழாம் சார்ஜெண்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படைப் புலனாய்வு அதிகாரி லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோரே ஏனைய இருவராவர்.

1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டி, கனேடிய அரசாங்கம் இத்தடைகளை விதித்துள்ளது.

குறித்த தடையுத்தரவுக்கமைய, அவர்கள் கனடாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதோடு, அவர்களுக்கு கனடாவிலுள்ள சொத்துகள் உள்ளிட்டவையும் முடக்கப்படும். அத்துடன் கனடாவுடன் வணிக உறவுகளில் ஈடுபடுவதற்கும் அவர்களுக்கு தடை விதிக்கப்படும்.

விசேட பொருளாதார நடவடிக்கைகள் (இலங்கை) விதிமுறைகள், பட்டியலிடப்பட்ட நபர்களின் சொத்து தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதையோ அல்லது நிதி அல்லது சேவைகளை வழங்குவதையோ கனடா மற்றும் கனடாவிற்கு வெளியே உள்ள கனேடியர்களுக்கு தடைசெய்வதன் மூலம் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் (செயல்திறன், சொத்து முடக்கம்) தடை விதிக்கப்படுகிறது. பட்டியலிடப்பட்டுள்ள குறித்த நபர்கள் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கனடாவிற்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

எனவும் கனடா அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் இரண்டு இராணுவ உறுப்பினர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கும் கனடாவின் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கனேடிய பதில் உயர் ஸ்தானிகரை இன்று (11) வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து உத்தியோகபூர்வமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது விடுதலைப் புலிகள் சார்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள சதி எனவும், இரு தரப்பு நியாயங்கள் எதனையும் விசாரணை செய்யாது தன்னிச்சையாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...