தனிநபர்களுக்குப் பதிலாக அரச நிறுவனங்கள் வரி செலுத்துவதைத் தவிர்க்க சுற்றறிக்கை

- இவ்வாரத்திற்குள் வெளியிடப்படும்
- நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு

உழைக்கும் போதான வரியை (Pay as You Earn - PAYE Tax), அரச அல்லது அரச பங்குடைமை நிறுவனங்கள்  செலுத்துவது இடைநிறுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கை இவ்வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வருமானம் பெறும் நபர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியாகவே இந்த உழைக்கும் போதான வரி விதிக்கப்படுவதாகவும், சில அரச மற்றும் அரச பங்குடைமை நிறுவனங்கள் அந்த வரியை செலுத்துகின்ற சம்பவங்கள் இதற்கு முன்னர் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  நாட்டின் தற்போதைய நிலையில் இவ்வாறான முறைகேடுகளை அனுமதிக்க முடியாது என சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.

“அது அரசாங்கமாக இருக்கலாம், அரச பங்குடைமை நிறுவனங்களாக இருக்கலாம், தனியார் துறையாக இருக்கலாம், குறிப்பிட்ட வரம்புக்கு மேல் சம்பாதித்தால், அவர்கள் உழைக்கும் போது செலுத்தும் வரி விதிக்கப்படும். ஆனால் கடந்த காலத்தில், குறிப்பாக அரச பங்குடைமை, கூட்டுத்தாபனங்கள் ஒரு சில சேவை ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள சூழ்நிலைகளின் அடிப்படையில் உழைக்கும் போது செலுத்தும் வரியை சம்பந்தப்பட்ட நிறுவனமே செலுத்திய சம்பவங்களை நாம் சந்தித்தோம். இது போன்ற திறமையற்ற நிலைமைக்கான நேரம் இதுவல்ல. இதை மிகத் தெளிவாக ஆராய்ந்து அவ்வாறு பணம் செலுத்துவதைத் தடுத்து அனைத்து அரச மற்றும் அரச பங்குடைமை நிறுவனங்களுக்கும் தெளிவான சுற்றறிக்கை வெளியிடப்படும்" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...