நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்

- குஜராத் காந்திநகரில் உடல் தகனம்
- ஜனாதிபதி ரணில் அனுதாபம் தெரிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று (30) அதிகாலை  காலமானார்.

"ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு, கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது" என தமது தாயார் ஹீராபென் மோடியின் மறைவு தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

 

 

ஹீராபென் மோடியின் உடல் இன்று (30) முற்பகல் குஜராத்தின் தலைநகர் காந்திநகரில் தகனம் செய்யப்பட்டது.

 

 

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் முதுமை காரணமான உடல்நலக் குறைவு தொடர்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

 

அஹமதாபாத் யு.என். மேத்தா இதய நோய் சிகிச்சை, ஆராய்ச்சி மையத்தில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலை காலமானார்.

அஹமதாபாத் அருகே ரேசான் கிராமத்தில் உள்ள தனது தாயாரின் குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, பிரதமர் மோடி அங்கு சென்று மாலையிட்டு, மரியாதை செய்தார்.

 

 

தொடர்ந்து, அவரது உடல் இறுதிச்சடங்குக்காக எடுத்துச்செல்லப்பட்டதோடு, வீட்டில் இருந்து வாகனத்தை நோக்கி தனது தாயாரின் உடலை பிரதமர் மோடி தோளில் சுமந்து சென்றார்.

 

 

கடந்த ஜூன் 18ஆம் திகதி தனது தாயாரான ஹீராபென் மோடியை சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற நரேந்திர மோடி, தனது தாய் 100ஆவது வயதில் காலடி வைத்துள்ளதாக ட்விட்டரில் பதிவொன்றை இட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீராபென் மோடி பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியுடன் காந்திநகர் அருகே உள்ள ரேசான் கிராமத்தில் வசித்து வந்தார்.

நரேந்திர மோடி தனது பெரும்பாலான குஜராத் பயணங்களின் போது ரேசான் கிராமத்திற்கு சென்று தாயாரை அடிக்கடி சந்தித்து அவருடன் நேரத்தை செலவிடுவார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுதாபம் தெரிவிப்பு

"பிரதமர் நரேந்திர மோடியின் அன்புத் தாயாரின் மறைவிற்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் பிரதமர் மோடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்"


Add new comment

Or log in with...