- சட்டத்தை அமுல்படுத்தாதிருக்க ரூ. 10,000 கோரியுள்ளார்
முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடம் ரூ. 8,000 இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடமிருந்து வாகன வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி சான்றிதழை அடமானமாக வைத்துக் கொண்டு அவரிடமிருந்து ரூ. 8,000 பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வாதுவை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் கான்ஸ்டபிள் என அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று (27) இரவு சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற நபர் மீது சட்டத்தை அமுல்படுத்தாமலிருக்க சந்தேகநபரான கான்ஸ்டபிள் 10,000 ரூபாவை இலஞ்சமாக கோரிய நிலையில், குறித்த சாரதியிடமிருந்து முதற் கட்டமாக அவர் வைத்திருந்த 3,000 ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதோடு, மீதிப் பணத்தை நாளை (28) வழங்குமாறும் வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி சான்றிதழை அடமானமாக வைத்துக் கொண்டு அவரை அங்கிருந்து அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சாரதி இன்று (28) முற்பகல் வாதுவை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, கேட்கப்பட்ட ரூ. 7,000 இல் ரூ. 2,000 இனை குறைக்குமாறு தெரிவித்து, 5,000 ரூபாவை பின்னர் தருவதாக உறுதியளித்துவிட்டு அங்கிருந்து வந்து, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். அதன் பிரகாரம், முச்சக்கரவண்டி சாரதியிடமிருந்து குறித்த பணத்தை பெற்றுக்கொண்ட போதே சந்தேகநபரான கான்ஸ்டபிள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான கான்ஸ்டபிளை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்கவின் பணிப்புரையின் பேரில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Add new comment