மின் கட்டண அதிகரிப்பு ஜனவரியில்; இன்றேல் மின் வெட்டு அதிகரிப்பு

- ஜனவரி 02 இல் யோசனை அமைச்சரவைக்கு
- மத தலங்களுக்கு இந்திய கடனில் 5kW இலவச சூரிய மின்கல தொகுதி

ஜனவரி மாதத்தில் மின் கட்டண அதிகரிப்பு அவசியம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான யோசனை ஜனவரி 02 இல் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

இன்று (27) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் இந்திய கடன்  மானிய கடனின் கீழ் இலவசமாக 5kW சூரிய மின்கல தொகுதி வழங்கப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மூன்று மாதங்களுக்குள் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மேலும் சில மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு மக்கள் பழக நேரிடும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர இங்கு சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தற்போது நாட்டின் மின்சார உற்பத்திக்கு அவசியமான நிலக்கரி இறக்குமதி மற்றும் கையிருப்பிலுள்ள நிலக்கரியின் அளவு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், மின்னுற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி கப்பலை கொண்டு வரும் முதல் கப்பல் ஜனவரி 05ஆம் திகதி வந்தடையவுள்ளதாகவும் மேலும் இரு கப்பல்கள் ஜனவரி 09, 16 ஆம் திகதிகளில் இலங்கை வந்தடையவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யவே இவ்வாறு மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக சிலர் குற்றம் சுமத்தினாலும், தற்போது மின்சாரத்தை உற்பத்தி செய்ய செலவிடப்படும் செலவீனத்தை ஈடு செய்யவே இக்கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் இங்கு தெரிவித்தார்.

ஆயினும் மின்சார சபையின் கடந்த கால நஷ்டத்தை ஈடு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டால் மின்கட்டண அதிகரிப்பு குறிப்பிட முடியாத அளவிலான அதிகரிப்பாக காணப்படுமென அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

இது நானோ, ஜனாதிபதியோ, அமைச்சரவையோ, தனிப்பட்டோ, அரசியல் ரீதியாகவோ எடுத்த முடிவு அல்ல. இது மின்சார சபையின் பொது முகாமையாளரோ, தலைவரோ, ஒரு பொறியாளரோ மட்டும் எடுத்த முடிவும் அல்ல. இதற்கென நிர்வாக கட்டமைப்பொன்று உள்ளது. மின்சார சபையில் அதிக எண்ணிக்கையிலான பொறியாளர்கள் உள்ளனர். எதிர்வரும் வருடத்தில் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களின் 12 வகையில் அனுமானங்களை ஒப்பிட்டுப் பார்த்தோம். அதில் உயரிய சந்தர்ப்பமாக வரட்சி ஏற்பட்டால் ஒரு அலகு மின்சார உற்பத்திக்கு ரூ. 56.90 செலவாகும் என அனுமானிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மின்சார சபை மீண்டும் இந்த 12 அனுமானங்களை 20 ஆக ஆலோசித்துள்ளது. இந்த 20 இல், மின்சார சபையில் காணப்படும் மின்சார நுகர்வு மற்றும் பொருளாதார அடிப்படையில் கிடைக்கும் தரவுகளை ஆலோசித்த பிறகு, இது மிகவும் பொருத்தமான முறை என்று அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதன்படி, ஜனவரி 02 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த 20 திட்டங்களுக்குள் தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குவதற்காக, மொத்தத் தேவையில் 27% ஐ குறிப்பாக நீர் மின்சாரத்திலிருந்து உற்பத்தி செய்ய முடியும் என்றும், 28% நிலக்கரியில் இருந்து உருவாக்க முடியுமெனவும் . அவர்கள் நம்புகிறார்கள். மேலும் மின்சார சபைக்குச் சொந்தமான டீசல் மற்றும் கனிய எண்ணெய் மூலமான மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 13%, மின்சார சபைக்குச் சொந்தமான காற்றாலை மின் நிலையங்களில் இருந்து 2%, ஏனைய தனியார் டீசல் மற்றும் கனிய எண்ணெய் மின் நிலையங்களில் இருந்து 12%, அதே போல் 13% புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள் மற்றும் 4% கூரை மீதான சூரிய மின்கலம் மூலம் பெறலாமென எடுகோளாக எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஒரு அலகு மின்சார உற்பத்திக்கான செலவு மட்டும் ரூ. 48.42 ஆக இருக்கும் என்று கணக்கிட்டுள்ளனர். அப்படியாயின், கடந்த ஓகஸ்ட் மாதம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கிய திருத்திய கட்டண அதிகரிப்பின் அடிப்படையில் அலகு ஒன்றுக்கு ரூ. 29.14 மாத்திரமே கிடைக்கின்றது. இதன்படி, சுமார் ரூ. 278 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த தொகையை ஈடுகட்டவே இந்த கட்டண திருத்தம் செய்யப்படுகிறது.

ஆயினும் இவ்வாறு மின்கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்கவும் முடியும். அப்படியானால், சில மணித்தியால மின்வெட்டுடன் நமது வாழ்க்கையை பழகிக் கொள்ள நேரிடும். ஆயினும், தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குமாறே மக்கள்  கேட்டுக் கொண்டனர். அவ்வாறு வழங்குவதாயின், எம்மிடம் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை அவசியம் பயன்படுத்த வேண்டும் என்பதோடு, தனியார் மின் உற்பத்தி நிலையங்களையும் பயன்படுத்த வேண்டும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...