மின்னுற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி கப்பல்கள் ஜனவரி 05, 09, 16 வருகிறது

கொள்வனவுக்காக கோரப்பட்ட நிலக்கரியை கொண்ட 3 கப்பல்கள் ஜனவரி மாதத்தில் இலங்கையை வந்தடையவுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் மின்சார உற்பத்திக்கு அவசியமான நிலக்கரி இறக்குமதி மற்றும் கையிருப்பிலுள்ள நிலக்கரியின் அளவு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (27) முன்னெடுத்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஜனவரி 05, 09, 16 ஆம் திகதிகளில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியுடனான 3 கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

தேசிய மின்கட்டமைப்புக்கு அவசியமான மின்னுற்பத்தியை மேற்கொள்வதற்கு அவசியமான நிலக்கரி கையிருப்பு குறைவடைந்துள்ள நிலையில் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்த நேரிடுமென, மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

ஆயினும் குறித்த கருத்துகளில் எவ்வித உண்மையுமில்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாதத்திலும் தற்போது அமுல்படுத்துவது போன்று 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களுக்கு திட்டமிட்ட மின் மின்வெட்டினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.


Add new comment

Or log in with...