மின்சாரத்துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை குறித்து குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர்களான டி.வி. சானக, இந்திக அநுருத்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்திரா தேவி வன்னிஆராச்சி, அசங்க நவரத்ன, சாகர காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மின்சாரத்துறையில் மேற்கொள்ளவேண்டிய மறுசீரமைப்புக் குறித்த முன்மொழிவுகள் பற்றி அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். இலங்கை மின்சார சபையின் வினைத்திறனை அதிகரிப்பது மற்றும் ஒழுங்குறுத்துகைப் பணியை உறுதிப்படுத்தும் நோக்கில் ஐந்து சுயாதீன நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டிருப்பதாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினரால் குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் எந்த முன்மொழிவுகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
மறுசீரமைப்பின் போது, மின்சார உற்பத்தி உள்ளிட்ட விடயங்களில் ஈடுபடும் தரப்பினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை இலகுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என உப குழுவின் தலைவர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
மின்சாரத்துறை மாத்திரமன்றி ஏனைய துறைகள் தொடர்பிலும் கொள்கைத் தயாரிப்புக்கென தனியான நிறுவனமொன்றை அமைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்கமைய பாராளுமன்றத்தின் ஊடாக உரிய சட்ட மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய சபைக்கு முன்மொழியவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மின்சாரத்துறை மறுசீரமைப்புத் தொடர்பான முன்மொழிவு பூரணப்படுத்தப்படும் வரை மறுசீரமைப்புத் தொடர்பான செயலகம் ஒன்று இயங்க வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர வலியுறுத்தினார்.
அத்துடன், மின்சாரத்துறை மாத்திரமன்றி சகல துறைகளிலும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு யார் பொறுப்பு? பொறுப்பாக நடந்துகொள்ளாதவர்களுக்கு என்ன தண்டனை? என்பது உறுதியாக ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை எனக் குழுவின் தலைவர் தெரிவித்தார். தேர்தலில் அரசியல்வாதிகளை அகற்றுவதற்கு மக்களுக்கு அதிகாரம் இருந்தாலும், தேவையான செயல்திறன் அளவைக் காட்டாத அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு குறிப்பிட்ட கொள்கைகள் எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதே பிரச்சினையை மின்துறையிலும் காணமுடியும் என்பதால், இந்நிலையை மாற்ற வேண்டியதன் அவசியம் இங்கு வலுவாக வலியுறுத்தப்பட்டது.
Add new comment