முதல் முறை பெண் ஜனாதிபதி நியமனம்
பெருவில் பாராளுமன்றத்தை கலைக்க முயன்ற ஜனாதிபதி பெட்ரோ கஸ்டில்லோ நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டு முதல் முறை பெண் ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை (07) இடம்பெற்ற இந்த அதிரடி நிகழ்வுகளை அடுத்து துணை ஜனாதிபதியாக இருந்த டினா பொலார்டே புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.
முன்னதாக பாராளுமன்றத்திற்கு பதில் அவசரகால அரசு ஒன்றை நியமிப்பதாக கஸ்டில்லோ அறிவித்தார். எனினும் இதனை பொருட்படுத்தாத எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் அவசரக் கூட்டத்தை நடத்தி ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினர்.
தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டதாக முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டார்.
மெக்சிகோ தூதரகத்தை நோக்கி செல்லும் வழியில் அவர் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில் கஸ்டில்லோவின் பதவிக் காலம் நிறைவடையும் 2026 ஜூலை வரை தாம் பதவியில் இருக்கப்போவதாக 60 வயது வழக்கறிஞரான பொலார்டே தெரிவித்தார்.
பெருவில் அண்மைய ஆண்டுகளில் பெரும் அரசில் நெருக்கடி இடம்பெற்று வருவதோடு அங்கு பல ஜனாதிபதிகளும் பதவி கவிழ்க்கப்பட்டுள்ளனர். 2020இல் ஐந்து நாள் இடைவெளியில் மூன்று ஜனாதிபதிகள் பதவிக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை ஆசிரியராக இருந்த இடதுசாரியான கஸ்டில்லோ 2021 ஜுன் மாதம் நடந்த தேர்தலில் வெற்றியீட்டி ஜனாதிபதி பதவியை ஏற்றபோதும் அண்மைக் காலத்தில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment