தேசத்தை கட்டியெழுப்புவதில் இனங்களிடையே பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது

தேசிய சூரா சபையின் பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். சுஹைர் தெரிவிப்பு

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நாட்டின் சகல பிரிவினர்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவசியமான நேரத்தில் பேச்சுவார்த்தை முறையாக மேற்கொள்ளப்படாமையே இந்நாடு இன்றைய பாதகமான நிலைக்கு வருவதற்குக் காரணமாகும்.

தேசிய சூரா சபையின் பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு அல்ஹிதயா கல்லூரியின் பஹார்டீன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் தேசிய சூரா சபையின் முன்னாள் உபதலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். சுஹைர் இவ்வாறு தெரிவித்தார்.

சட்டத்தரணி ரீ. கே.அஸூர் தலைமையில் இப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தேசிய சூரா சபையின் உபதலைவர்களில் ஒருவரான அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல், 'தேசிய சூரா சபை - நேற்று, இன்று, நாளை' என்ற தலைப்பில் சபையின் செயற்பாடுகள் பற்றி விளக்கத்தை வழங்கினார். 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சூரா சபையானது கடந்த ஒன்பது வருடங்களாக பல்வேறுபட்ட சவால்களுக்கு மத்தியில் இயங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் அதிகம் இருப்பதாகவும் அதற்காக சமூகத்தின் புத்திஜீவிகள் துறைசார் நிபுணர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். சுஹைர் தனது உரையில் மேலும் கூறியதாவது:

"முஸ்லிம்கள் அன்று முதல் இன்றுவரை நாட்டுப் பற்றுடன் செயல்பட்டு வருகின்றனர். முஸ்லிம் சமூகம் இந்த நாட்டுக்கு நிறைய பங்களிப்புகளை செய்திருக்கிறது. இனங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை, உரையாடல் என்பன கடந்த காலத்தில் உரியமுறையில், நல்ல எண்ணத்தோடு இடம்பெற்றிருந்தால் யுத்தங்களையும் பொருளாதார நெருக்கடியையும் தவிர்த்திருக்கலாம். எனவே, கலந்தாலோசனையும் பரஸ்பர புரிந்துணர்வும் இந்த நாட்டில் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

1978 இல் ஜே.ஆர். ஜயவர்தன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் 1979 இல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தைக் கொண்டு வந்தார். இதனை இரண்டு வருடத்திற்கு என்றே கொண்டுவந்தார்கள். இதன் மூலம் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம் என நினைத்தார்கள். ஆனால் இந்த சட்டம் நாட்டில் சமாதானத்தை கொண்டுவருவதற்கு பதிலாக, இரண்டு வருடத்தில் பிரச்சினைகளை முடித்துக் கொள்வதற்கு பதிலாக 30 வருட கால யுத்தத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான உயிர்கள் உள்ளிட்ட இழப்புக்களை சந்திக்கவேண்டி வந்தது.

இதனால் நாட்டின் செல்வத்தையும், வளங்களையும் இழக்கவேண்டி இருந்தது, நாட்டின் செல்வம் வெளியே சென்றது. இதனால் பல வெளிநாடுகள் நன்மை அடைந்தன. இவை நாட்டை பாதாளத்தில் தள்ளின. நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டது. இதற்கு ஆரம்பத்தில் இருந்தவர்கள் மட்டுமன்றி இடையில் இருந்தவர்களும், இறுதியாக இருந்தவர்களும் பொறுப்புக் கூற வேண்டும். அவர்கள் அன்று சரியாக சிந்தித்து முன்யோசனையோடு செயல்பட்டிருந்தால் இன்று இந்நிலை ஏற்பட்டிருக்காது.

நாட்டின் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு முற்படவில்லை. நாட்டில் முஸ்லிம் மக்களுடைய கடமை என்ன?, சிவில் சமூகத்தின் கடமை என்ன?, உலமாக்களின் கடமை என்ன?, ஆட்சியாளர்களின் கடமை என்ன?, பொறுப்புகள் எவை? என்ன, காரியங்களை எவ்வாறு கையாள வேண்டும்? என்பன பற்றி சிந்திப்பது அவசியம். அந்த சிந்தனையோடுதான் எதிர்காலத்தை அணுக வேண்டும்".

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஏ.பீ. எம். அஷ்ரப், உஸ்தாத் எம். ஏ. எம். மன்சூர், பேராசிரியர் நாஜிம், பேராசிரியர் சித்தீக் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், உலமாக்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பொதுச்சபை உறுப்பினர்கள், தேசிய சூரா சபையின் 11 உறுப்பு அமைப்புகளது பிரதிநிதிகள் என பெருமளவானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் போது, சபையின் சட்டக் கோவையில் திருத்தங்கள் முன்மொழிபட்டு அங்கீகரிக்கப்பட்டன. அத்துடன் அடுத்த இரு ஆண்டுகளுக்கான நிறைவேற்றுக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.


Add new comment

Or log in with...