மலையக பகுதிகளில் வறுமை நிலை 51 வீதமாக அதிகரிப்பு

மின்சார பட்டியல் ரீதியாக சமுர்த்தி வழங்கப்பட வேண்டும்

சபையில் மனோ MP வேண்டுகோள்

 

நாட்டில் வறுமை நிலை 26 வீதமாக அதிகரித்துள்ளதுடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் அது 51 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அது தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று மனோ கணேசன் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கு அரசாங்கம் மேற்கொள்ளப் போகும் விசேட திட்டங்கள் என்ன என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார். வரவு - செலவுத் திட்டத்தில் மலையக தோட்டப்பகுதி மக்கள் தொடர்பில் எத்தகைய வேலை திட்டங்களும் முன் வைக்கப்படவில்லை. தற்போதைய நிலைமையில் நிவாரணங்களை வழங்க முடியாதென்றாலும் குறைந்தபட்சம் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றாவது குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் பேசப்பட்டுவருகிறது. கிராமப் புறங்களில் அது 36 வீதமாகவும் நகர்ப்புறங்களில் அது 46 வீதமாகவும் காணப்படுவதுடன் மலையகத் தோட்டப்புறங்களில் அது 53 வீதமாகவும் காணப்படுகின்றது.

அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்துவதுடன் தோட்டப் பகுதி மக்களுக்காக அரசாங்கம் எத்தகைய திட்டத்தை முன்னெடுக்கப் போகின்றது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோன்று கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சமுர்த்தி உதவி வழங்குவது முறைப்படுத்தப்பட வேண்டும் அதற்காக தற்போதுள்ள சமுர்த்தி பட்டியலை நீக்கிவிட்டு மின் கட்டண பட்டியலை வைத்து அதற்கான செயற் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் நியாயமானதாக அமையுமென்பதால் அதையே மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...