வாசகர் உள்ளத்தில் மறையாமல் வாழும் எழுத்தாளர் அகஸ்தியர்

தனது 20 ஆவது வயதில் கவிதை மூலம் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் எழுத்துலகுக்கு அறிமுகமானார். சுதந்திரனில் எழுதத் தொடங்கியவர் தினகரன், வீரகேசரி, தினபதி, ஈழநாடு, மல்லிகை, சுடர் ஆகிய பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினார்.

ஓகஸ்ட் 29, 1926 இல் பிறந்த எஸ். அகஸ்தியர் டிசம்பர் 8, 1995 இல் பாரிசில் மறையும் வரை தலைசிறந்த எழுத்தாளராகவே விளங்கினார். ஈழத்து இலக்கிய ஆக்கத்தின் பாரம்பரியத்தையும் தோற்றத்தையும், வளர்ச்சியைப் பார்க்கும்போது அகஸ்தியரும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் பின்னிப் பிணைந்திருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையில் பிறந்த அகஸ்தியர் சிறுகதைகள், குறும்புதினங்கள், புதினங்கள், மேடை நாடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள் எனப் பல கோணங்களிலும் எழுதியவர். 1986 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தார். எழுத்து, தீபம், கண்ணதாசன், கலைமகள், தாமரை போன்ற தமிழக இதழ்களும் இவரது சிறுகதைகளைப் பிரசுரித்தன. தாமரை இதழ் 1970 ஆம் ஆண்டில் இவருடைய படத்தை அட்டையில் பிரசுரித்தது.

அவருடைய நூல்கள் இருளினுள்ளே, திருமணத்திற்காக ஒரு பெண் காத்திருக்கிறாள், மண்ணில் தெரியுதொரு தோற்றம், கோபுரங்கள் சரிகின்றன, எரிநெருப்பில் இடைபாதை இல்லை, நரகத்திலிருந்து, பூந்தான் யோசேப்பு வரலாறு, மகாகனம் பொருந்திய, எவளுக்கும் தாயாக, அகஸ்தியர் பதிவுகள், கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும், அகஸ்தியர் கதைகள் ஆகியனவாகும். அகஸ்தியரின் வாழ்வையும் பணிகளையும் பற்றிய பல கட்டுரைகள் பலரால் எழுதப்பட்டுள்ளன.

தனது இளம் பராயத்திலேயே இலக்கிய உலகில் பிரவேசித்து, இலங்கையில் வெளியான பல பத்திரிகைகள், இதழ்களில் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், கட்டுரை, உணர்வூற்று உருவகம், நாடகம், இலக்கிய வரலாறு முதலான சகல கலை, இலக்கியத்துறைகளிலும் தொடர்ச்சியாக அயர்ச்சியின்றி எழுதியவர். தனது ஆக்க இலக்கியங்களின் கருப்பொருளாக அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் மீட்சியை சமுதாயப் பார்வையுடனும், பரிசுத்த நேசிப்புடனும் நோக்கினார்.

அவரது நூல்கள் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும், பிரான்ஸிலும் வெளியாகியுள்ளன. 1946 இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோற்றிவிக்கப்பட்டபோது, தன் இளம் வயதின் கருத்தியல்களை அதில் பிரதிபலிக்கும் நோக்குடன் இணைந்து கொண்டு செயலாற்றினார்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக்குழுவில் இணைந்திருந்தவர். தனது படைப்புகளை வெளியிடத் தயங்கிய பத்திரிகை, இதழ்களின் ஆசிரியர்களுடனும் எந்தத் தயக்கமும் இன்றி நேரடியாக கருத்துமோதல்களில் ஈடுபடும் இயல்பும் கொண்டிருந்தவர்.

1960 ஆம் ஆண்டுகாலங்களில் இலங்கையில் சாதித்தியம் பெருநெருப்பு கொழுந்துவிட்டு எரிந்த காலத்தில் எழுதப்பட்ட 'எரிநெருப்பில் இடைபாதையில்லை' என்ற நாவல் ஈழத்தில் எழுந்த முதல் ‘தலித்திய' நாவல் என்னும் சிறப்பினைப் பெற்றுள்ளது. தர்மாவேச பண்புகள் அவரிடமிருந்தபோதிலும் குழந்தைகளுக்குரிய மென்மையான இயல்புகளினாலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி அனைவரையும் அன்போடு அணைத்தவர். ஈழத்தின் பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் இலக்கியம் மூலம் தாம் எண்ணித் துணிந்த தேசப்பணியொன்றினைச் செய்வதாகவே அவர் கருதிச் செயற்பட்டார்.

மனிதநேயத்தை நேசித்த இலக்கியவாதி அகஸ்தியர் தனது இலக்கியப் படைப்புக்களில் ஈழத்தில் உள்ள பல கிராமங்களின் பேச்சுவழக்கினையும், யாழ்ப்பாண மக்களின் பேச்சுவழக்கினையும், மலையக முஸ்லிம் மக்களின் பேச்சு வழக்கினையும் சுவாரஸ்யத்துடன் எழுதுவதும், இந்தப் பேச்சுத் தமிழுக்குச் சரியான எழுத்துருவம் கொடுத்திருப்பதும் அவரது தனிக்கலை.

அகஸ்தியர் 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மறையும் வரை, தனது மரணப்படுக்கையிலும் சோர்வடையாமல் இறுதிவரை தனது இலட்சிய வேட்கையை வைரம் பாய்ந்த எழுத்துக்கள் மூலம் மக்கள் மனங்களில் பதித்தார்.

கடும் விமர்சனங்களையும் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ளவர். மனித நேயத்தை நேசித்து அதற்காக வாழ்ந்து மறைந்துவிட்ட ஒரு இலக்கியவாதியின் மூச்சு, அவரது எழுத்துக்களைப் போல இன்றும் வாசகர் மனங்களிலே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஐங்கரன் விக்கினேஸ்வரா...


Add new comment

Or log in with...