எமது கடலையும், நிலத்தையும் தாரை வார்க்க வேண்டாம்

அங்கஜன் எம்,பி பாரளுமன்றில் தெரிவிப்பு

எங்கள் கடலையும் நிலங்களையும் யாரோ சிலரின் இலாபத்துக்காக தாரைவார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயம், கடற்றொழில், நீர்ப்பாசனம் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் நேற்று விவசாயம், மீன்பிடி, நீர்ப்பாசனம் தொடர்பாக, விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் ஒன்றை நாம் மறந்துவிட்டோம். 2023 தொடங்கியதுமே இந்நாட்டில், சின்ன வெங்காயம், உருளைக் கிழங்கு, காய்கறிகள் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு வரப்போதை நாங்கள் மறந்துவிட்டோம்.

எங்கள் மாவட்டத்தில் இந்தாண்டு பெரும்போக பயிர்ச்செய்கை வழமைபோல நடக்கவில்லை. சின்ன வெங்காயம், உருளைக் கிழங்கு, காய்கறி எதுவும் இம்முறை வழமைபோல பயிரிடப்படவில்லை.

யாழ்ப்பாணத்தின் விவசாய நிலங்கள் புற்களும் புதர்களுமாக நிரம்பிக்கிடக்கின்றன. இப்போது ஒரு கிலா 400 ரூபாய்க்கு குறைவாக எந்தவொரு மரக்கறியையும் வாங்கமுடியாது. விரைவில் கையில் பணம் இருந்தாலும் கடையில் காய்கறி இல்லாத நிலைதான் வரப்போகிறது.

நாட்டின் மூன்றில் 01 பங்கு கடல்வளம் வடக்கில்தான் உள்ளது. ஆழ்கடல், குடாக்கடல், தரவைக்கடல், தீவுப்படுகைகள் என எல்லா வளங்களும் வடக்கிலுள்ளன.

இவற்றையெல்லாம் பாதுகாத்த பாரம்பரிய மீன்பிடியைதான் எங்கள் மக்கள் செய்தனர். ஆனால் இன்று டொலருக்காக கரையோரங்கள் கணக்கில்லாமல் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

இதனால், கண்டல் தாவரங்கள் அழிந்து மீன்களின் இனப்பெருக்கம் தடுக்கப்படுகிறது. இப்போதுவரை வடக்கில் 616 ஏக்கர் வரை கடல் அட்டை உற்பத்தி நடைபெறுகிறது.

ஐம்பது வருடங்களுக்கு, முன்பாகவே யாழ்ப்பாணத்தில் இயற்கையான கடலட்டைகளை பிடித்து பதப்படுத்தி வியாபாரம் செய்த உள்ளூர் வியாபாரிகள் இருந்தனர்.

ஆனால், இப்போது கடலட்டை குஞ்சுகளை பிடித்து பண்ணை அமைத்து செயற்கையாக இனப்பெருக்கம் செய்கிறார்கள். இயற்கையாக கிடைக்கும் வளத்தை அளவோடு பெறாமல் அளவுக்கதிகமாக ஆசைப்பட்டு உள்ள வளத்தையும் அழிப்பது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான். மீனவர்கள் இதற்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார்கள் என்றார்.

 


Add new comment

Or log in with...