தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இந்தியாவின் முன்னேற்றம் இணைக்கப்பட்டுள்ளது

- உலகளாவிய மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர்

தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இந்தியாவின் முன்னேற்றம் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் நடைபெற்ற மூன்று நாட்கள் உலகளாவிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் ஏழாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சும் கார்னகி இந்தியா நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இம்மாநாட்டின் கருப்பொருள் தொழில்நுட்பத்தின் புவிசார் அரசியல் என்பதாகும். இம்மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'புவிசார் அரசியலிலும், வளர்ந்து வரும் உலக ஒழுங்கிலும் தொழில்நுட்பம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் புவிசார் அரசியலின் மையப்புள்ளியாக உள்ளது. அணுசக்தி, இணையம் அல்லது விண்வெளி உள்ளிட்ட எதுவானாலும் தொழில்நுட்பம் தான் செல்வாக்கு பெற்றுள்ளது. ஒவ்வொரு நாடும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் தேசிய பாதுகாப்பு முடிவுகளை வடிவமைத்து கொண்டுள்ளன.

நாம் போட்டியிடும் அரசியலின் கூர்மையான முரண்பாடுகளைப் பற்றி சிந்திக்கும்போது, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் அல்லது தொழில்நுட்ப விவாதங்களில் பிரதிபலிப்பவைகளை அறிந்திருப்பது அவசியம். தொழில்நுட்பம் தொடர்பில் இந்தியா இருண்டதாக இருக்க முடியாது. ஏனெனில் தொழில்நுட்பத்தில் மிக வலுவான அரசியல் அர்த்தம் உள்ளது.

தொழில்நுட்பத்தில் தரவு என்பது புதிய எண்ணெயாகவும் வலுவான அரசியல் அர்த்தங்கள் கொண்டதாகவும் உருவாகியுள்ளன. அதில் நடுநிலை உள்ளது என்ற பார்வையை நாம் நிறுத்த வேண்டும். பொருளாதாரம் அல்லது வேறு எந்தச் செயலையும் விட தொழில்நுட்பம் நடுநிலையானது அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...