- மாணவியிடமிருந்து கருத்தடை மீட்பு
- வகுப்பு WhatsApp குழுமத்தின் ஊடாக ஆசை வார்த்தை கூறி மோசடி
- அவரது வகுப்பின் ஏனைய மாணவிகளிடமும் விசாரணை
குருணாகல் மாவட்டம், பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவரைக் கைது செய்துள்ள பன்னல பொலிஸார், அவரை குளியாபிட்டி நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை இம்மாதம் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தங்கொட்டுவ, வென்னப்புவ, மாகந்துர போன்ற பல பிரதேசங்களில் மாணவர்களுக்கு விஞ்ஞானப் பாடம் போதிக்கும் 24 வயதுடைய பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
பன்னல பொலிஸ் பிரிவுக்குபட்ட பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவரிடமிருந்து கருத்தடை கண்டெடுக்கப்பட்டதாகவும், பின்னர் அப்பாடசாலையிலிருந்து தலைமறைவான சம வயதுடைய இரு மாணவிகள் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்ததாக பன்னல பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சாவித்திரி சிறிமான்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் போது முதலில் இரு மாணவிகளும் தாம் தவறு செய்யவில்லை என்றும் ஒரு மாணவியே தவறு செய்துள்ளதாகத் தெரிவித்ததாக பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
பின்னர் பொலிஸார் குறித்த மாணவிகளை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்து மீண்டும் மீண்டும் அம்மாணவிகளிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ஒரு மாணவியை சந்தேகநபரான பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தகவல்கள் வெளிவந்ததாகவும், பிரத்தியேக வகுப்புடன் தொடர்புடைய வட்சப் குழுமத்திலிருந்து சந்தேகநபர் குறித்த மாணவியின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்று மாணவியோடு பேசி ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் என பொலிஸார் தெரிவித்திருப்பதால் அவரது வகுப்புக்களில் கற்கும் ஏனைய மாணவிகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து 15ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமா்ப்பிக்குமாறும் நீதவான் பொலிஸாருக்கு இதன் போது உத்தரவிட்டுள்ளார்.
(புத்தளம் விசேட நிருபர் - எம். எஸ். முஸப்பிர்)
Add new comment