தொடர் தோல்வியை தவிர்க்க இலங்கை இன்று பலப் பரீட்சை

ஆப்கானுடனான 3ஆவது ஒருநாள்:

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (30) பல்லேகலவில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே முதல் போட்டியில் தோற்று இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் தொடர் தோல்வியை தவிர்க்கும் எதிர்பார்ப்புடனேயே இலங்கை அணி இன்று களமிறங்கவுள்ளது.

அதேபோன்று அடுத்த ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு இலங்கை அணி நேரடி தகுதிபெறுவதற்கு சிறிய வாய்ப்பே இருக்கும் நிலையில் அந்த நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்வதற்கு இன்றைய போட்டி தீக்கமானதாக உள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிக்கான சுப்பர் லீக் புள்ளிப் பட்டியலில் இலங்கை தற்போது பத்தாவது இடத்தில் இருக்கும் நிலையில் உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெற எட்டு இடங்களுக்குள் முன்னேற வேண்டும். இலங்கை அணிக்கு அந்த இலக்கை எட்ட இன்றைய போட்டியுடன் நான்கு போட்டிகள் மாத்திரமே மிச்சம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் ஒரு மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. தனன்ஞய லக்ஷானுக்குப் பதிலாக துனித் வெல்லாலகே களமிறக்கப்படலாம்.

இருக்கும் வீரர்களில் இலங்கை அணிக்கு துடுப்பாட்டத்தில் நம்பிக்கை சேர்த்த பதும் நிசங்க மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அதே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் முன்வரிசையில் களமிறங்கும் குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க போன்ற வீரர்கள் முதல் போட்டியில் செய்த அதே தவறினை செய்யாது மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டிய தேவை உள்ளது.

பந்துவீச்சில் கசுன் ராஜித இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். அதேநேரம் வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன மற்றும் லஹிரு குமார ஆகியோரும் சிறப்பாக செயற்பட்டனர். இந்தப் போட்டியிலும் அந்த வீரர்கள் திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

இந்தத் தொடரின் மூலம் சுப்பர் லீக் புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறி உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி இன்றைய போட்டியிலும் இலங்கைக்கு பெரும் சவாலாக இருக்கும்.


Add new comment

Or log in with...