யாழ்ப்பாணம் டவர் மண்டப அரங்க மன்றத்தில் பேராசிரியர் மௌனகுருவின் பயிற்சிப் பட்டறை

டவர் மண்டப அரங்க மன்றம் இலங்கையில் அரங்கியல் கலைகளின் மையமாக விளங்குகின்றது. இது, பாராளுமன்ற சட்டம் எண்.01 இன் கீழ் 1978 இல் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் மேலாண்மைக்குழுவின் தலைவராக பிரதமர் விளங்குகின்றார். இது புத்த சாசன சமய கலாசார அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது.

டவர் மண்டப அரங்க மன்றம் தமிழ் நாடகக் கலையையும் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் நிறுவனம் ஆகும். க.பொ.த உயர்தரம் முடித்த மாணவர்கள் டவர் அரங்க மன்றத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகின்ற நாடகப் பாடசாலையில், இரு வருடம் உயர் டிப்ளோமா பாடநெறியை முடித்த பின்னர் திறந்த பல்கலைக்கழகத்தில் இரு வருடம் உயர் பட்டப்படிப்பு பெற்று, ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கப்படுகின்றனர்.

இப்பாடநெறியினை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நடனம் மற்றும் இசைத்துறை ஆகியன அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளன. டவர் மண்டபம் யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பில் அமைந்துள்ள சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலையத்தில் நாடகமும் அரங்கியலும் உயர் டிப்ளோமா பாடநெறியை நடத்தி வருகின்றது. அங்கு கல்வி பயின்று வருகின்ற மாணவர்களின் நாடகத்திறன் விருத்திக்காக நாடகத்துறை சார்ந்த சிறந்த வளவாளர்களை அழைத்து வந்து பயிற்சிப் பட்டறை வழங்கப்படுகின்றது.

அந்தவகையில் ஈழத்தின் புகழ் பூத்த நாடகக் கலைஞரும் பல்கலைக்கழக முன்னாள் பேராசியருமான சி.மௌனகுரு அவர்கள் இரு நாட்கள் நாடகம் மற்றும் கூத்து சார்ந்த பயிற்சிப்பட்டறையை டவர் அரங்க மாணவர்களுக்காக நடத்தினார். இம்மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெற்ற இப்பயிற்சியில் பேராசிரியரின் அழைப்பின் பேரில் இந்தியாவின் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்ற தினேஷ்குமார் மற்றும் சிவா.துஜன் ஆகியோரும் கலந்து பயிற்சிப்பட்டறையை முன்னெடுத்துச் சென்றனர்.

26 ஆம் திகதி மாலை நடைபெற்ற நிகழ்வில் தகைசால் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும் அவருடைய பாரியரும் சமுகமளித்திருந்தனர். பேராசியர்கள் இருவரும் தமது பழைய நினைவுகளை மீட்டெடுத்து சிறு நிகழ்த்தயை நிகழ்த்திக் காட்டியிருந்தமை இப்பட்டறையின் சிறப்பம்சமாக அமைந்திருந்தது.

பேராசிரியர் மௌனகுரு தனது அனுபவத்தையும் அனுபவ முதிர்ச்சியையும் ஒன்றிதணைத்து செயலாற்றியிருந்தார். மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டதுடன், புதுவிதமான அனுபவங்களைப் பெற்றறிருந்தார்கள். அரங்க விளையாட்டு, அரங்கப் பயிற்சி என்று ஆரம்பித்து நாடகத்தை எவ்வாறு கூட்டாக இணைந்து தயாரிப்பது என்று பல்வேறு பயிற்சிகளைப் பேராசிரியரிடம் இருந்து மாணவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

டவர் மண்டபத்தின் தமிழ்ப் பிரிவு நாடகத்துறைக்கு இவ்வாறான செயற்பாட்டை வழங்கிக் கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பணிப்பாளரான (நாடகம்) கலாநிதி.டி.எம்.எஸ். திசாநாயக்க சிறந்த முறையில் அரங்க மன்றத்தை முன்னெடுத்துச் செல்கின்றார் என்பது தமிழ் துறைக்கு அவர் கொடுத்துள்ள முக்கியத்துவத்தில் இருந்து தெரிகின்றது.


Add new comment

Or log in with...