மருந்து வகை தட்டுப்பாட்டுக்கு விரைவான தீர்வு அவசியம்

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித அரசிடம் கோரிக்கை

மருந்துத் தட்டுப்பாடு, நெருக்கடிகளுக்கு விரைவாக தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் மொத்தமாக 24,500 டாக்டர்களே சேவையிலுள்ளனர் என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர் 60 வயதில் ஓய்வு பெறுவதற்கான தீர்மானத்தினால் பெருமளவில் டாக்டர்கள்

ஓய்வு பெறும் போது சுகாதாரத்துறையில் பெரும் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்படுமென்றும் அது கிராமப்புற வைத்தியசாலைகளை பெரிதும் பாதிக்குமென்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுகாதார அமைச்சு மற்றும் புத்தசாசன சமய விவகார அமைச்சுகளுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மருந்து உற்பத்தி செய்யும் வழிமுறையில் மாற்றங்களை மாற்றத்தை மேற்கொண்டாலும் உலக சுகாதார அமைப்பினால் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை கறுப்புப் பட்டியலுக்குள் சேர்க்கப்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு இடம்பெற்றால் அது நாட்டின் எதிர்கால பரம்பரையினருக்கு பாரிய பிரச்சினையாக அமையும்.

தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையிலேயே மருந்து பதிவு செய்யும் வழிகாட்டலுள்ளது. இந்த வழிகாட்டல் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுடன் உருவாக்கப்பட்டது.

இந்த வழிகாட்டலிலிருந்து ஒரு சிறிய மாற்றத்தை செய்ய முற்பட்டாலும் அது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும். அதனால் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் இருக்கும் மருந்துகளை பதிவு செய்யும் வழிகாட்டல்களில் எதனையும் திருத்துவதற்கு இடமளிக்கவேண்டாம்.

அது இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு பாரிய பிரச்சினையாக அமைந்து விடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...