பொறுப்புணர்வுடன் பயன்படுத்தப்பட வேண்டிய வெகுஜன ஊடக சுதந்திரம்

இன்றைய உலகில் வெகுஜன ஊடகம் என்பது மாபெரும் சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. முழு உலகமும் ஒரு கிராமம் என்ற நிலையை அடைந்திருப்பதற்கு இந்த ஊடகம் பாரிய பங்களிப்பை நல்கியுள்ளது. அதேநேரம் உலகின் தீர்மானமிக்க சக்தியாகவும் திகழுகிறது வெகுஜன ஊடகம்.

ஜனநாயகப் பாரம்பரியங்களைக் கொண்ட நாடுகளில் வெகுஜன ஊடகங்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக நான்காவது தூணாக விளங்குகிறது ஊடகம். உலகில் ஊடகம் பெற்றுள்ள செல்வாக்கையும் சக்தியையும் வேறு எந்தவொன்றும் பெற்று இருப்பதாகத் தெரியவில்லை.

இவ்வாறு முக்கியத்துவம் பெற்று விளங்கும் வெகுஜன ஊடகத்திற்கு இலங்கையும் உரிய இடத்தையும் அந்தஸ்தையும் அளித்திருக்கிறது. நீண்ட கால ஜனநாயகப் பாரம்பரியத்தைப் பேணிவரும் நாடு அது தொடர்பில் கூடுதல் கவனமும் அக்கறையும் கொண்டு செயற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில்தான் தற்போதைய வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, 'ஊடகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு எதிராக அரசாங்கம் ஒரு போதும் செயற்படாது' என்று பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் குறிப்பிட்டு இருக்கின்றார்.

வெகுஜன ஊடகம் மற்றும் போக்குவரத்து அமைச்சுகளுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்.

ஜனநாயக நாடொன்றில் வெகுஜன ஊடகத்துறை பெற்றுள்ள சுதந்திரங்களையும் உரிமைகளையும் இந்நாட்டு வெகுஜன ஊடகங்களும் பெற்றுள்ளன. அவற்றுக்கு எதிராக அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என்பதையே அமைச்சர் இந்த உரையின் ஊடாக உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

வெகுஜன ஊடகத்துறை ஒழுங்குமுறையாகப் பயன்படுத்தப்படுவது அவசியம். அது தவறாகவும் பிழையாகவும் பயன்படுத்தப்படும் போது அதன் தாக்கங்களும் பாதிப்புகளும் சமூகத்தில் பிரதிபலிக்கவே செய்யும். சில வெகுஜன ஊடகங்கள் தவறாகவும் முறையற்ற வகையிலும் பயன்படுவது அவ்வப்போது சுட்டிக்காட்டப்படவே செய்கின்றது. அதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படலாகாது என்பதுதான் மக்களின் கருத்தாகும். வெகுஜன ஊடகங்கள் அந்தளவுக்கு செல்வாக்கு மிக்கவையாக விளங்குகின்றன.

அதன் காரணத்தினால் நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டியது வெகுஜன ஊடகங்கள் கொண்டிருக்கும் பாரிய பொறுப்பாகும். ஆனபோதிலும் சில சமூக ஊடகங்கள் ஊடக நெறிமுறைகளுக்கு அப்பால் சென்று செயற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த காலத்தில் இனரீதியிலான முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துவதில் சில சமூக ஊடகங்கள் அதிக செல்வாக்குச் செலுத்தியுள்ளன. அற்றின் விளைவான தாக்கங்கள் அதிக அழுத்தங்கள் கொண்டனவாக இருந்துள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்துள்ளது.

ஆனால் சமூக, கலாசார நெறிமுறைகளுக்கும் விழுமியங்களுக்கும் பாதிப்புகள் ஏற்ப இடமளிக்கப்படலாகாது. இந்த நிலையில்தான் சமூக ஊடகங்களைக் கண்காணிக்கும் வகையிலான சட்டமொன்றை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இவ்வாறான சட்டம் நாட்டுக்கு உண்மையில் மிகவும் அவசியமானது. அதுவே நாட்டை உண்மையாக நேசிக்கும் அனைத்துத் தரப்பினரதும் கருத்தாகும். அப்போதுதான் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை சமூக, கலாசார விழுமியங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுத்தாத வகையில் ஒழுங்கமைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இச்சட்ட ஏற்பாடு தொடர்பில் பலவித ஐயப்பாடுகளும் சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன. சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான சட்டரீதியிலான முயற்சி ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கை என்று கூறப்படுகிறது. அவ்வாறான ஐயங்களுக்கும் சந்தேகங்களுக்கும் முற்றிப்புள்ளி வைக்கும் வகையில்தான் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார் என்பதில் ஐயமில்லை.

அதனால் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களும் ஊடக நெறிமுறைகளைப் பேணி நடப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதன் ஊடாகவே ஊடகங்களின் ஊடாக சமூகத்தில் ஏற்படக் கூடிய தவறான தாக்கங்களையும் பாதிப்புக்களையும் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ஆகவே நாட்டினதும் மக்களினதும் முன்னேற்றத்திற்காகவும் நலன்களுக்காகவும் அனைத்து ஊடகங்களும் உழைக்க வேண்டும். அது நாட்டிலும் சமூகத்திலும் விரைவானதும் வேகமானதுமான மறுமலர்ச்சிமிக்க மாற்றத்திற்கு வழிவகுக்கும்.


Add new comment

Or log in with...