மஹவ - யாழ்ப்பாணம் புகையிரத சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்தம்

மஹவ - யாழ்ப்பாணம் வரையான புகையிரத சேவையை, 5 மாதங்களுக்கு இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றையதினம் (28) இலங்கை தமிழ் அரசு கட்சியின் (த.தே.கூ.) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

புகையிரதப் பாதை புனரமைப்புக் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, மஹவ - யாழ்ப்பாணம் வரையான புகையிரத சேவை, 2023 ஜனவரி 15 முதல் 5 மாதங்களுக்கு இவ்வாறு இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் நிதியுதவியுடன் குறித்த புகையிர பாதை புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கமைய, வடக்கு புகையிரத சேவை கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்படுமென்றும் புகையிரத திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஆயினும் பயணிகளின் நலன் கருதி யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி வரை விசேட ரயில் சேவை நடைபெறுமென திணைக்களம் குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறு புகையிரத சேவை இடைநிறுத்தப்படும் காலத்தில் அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை விசேட பஸ் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படுமெனவும், அதனை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புகையிரத பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர இதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...