பைத்துல் முகத்தஸ் மீண்டும் பலஸ்தீன் வசமாகுமா?

நவம்பர் 29 பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினம்

பலஸ்தீனத்தில் அமைந்த பைத்துல் முகத்தஸ் சிறப்பு பெற்றது. முஸ்லிம்களின் முதலாவது கிப்லாவாக பைத்துல் முகத்தஸ் சிறப்பு பெறுகிறது. நன்மையை நாடி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட மூன்று மஸ்ஜிதுகளில் இதுவும் ஒன்று. உலக முஸ்லிம்களின் மூன்று புனித தலங்களில் ஒன்றான பைத்துல் முகத்தஸ் இஸ்ரேல் வசம் உள்ளது.

பலஸ்தீனர்கள் வாழ்ந்த பலஸ்தீன பூமியில் யூதர்கள் புகுந்து கொண்டனர். உலகில் தாயகம் இல்லாது அமெரிக்கா, ஜெர்மன், பிரித்தானியா, ரஷ்யா உட்பட இன்னும் பல நாடுகளில் யூதர்கள் வாழ்ந்து வந்தனர். யூதர்கள் புத்திக் கூர்மையுடையவர்கள். எல்லா நாடுகளிலும் விஞ்ஞானிகளாகவும் பணக்காரர்களாகவும் உயர்அதிகாரிகளாகவும் அந்தந்த நாட்டில் ஆட்சியில் செல்வாக்கு செலுத்தக் கூடியவர்களாகவும் இருந்தனர்.

உலகில் எங்கேயாவது ஓரிடத்தில் யூத இராச்சியம் அமைக்க அவர்கள் முடிவெடுத்தனர். 1896 ஆம் ஆண்டளவில் ஹெர்ஸல் (Herzl) என்ற ஒஸ்திரிய யூதர் 'யூத இராச்சியம்' என்ற நூலொன்றை வெளியிட்டார். அந்த நூலில் காணப்படுவது உலகில் யூதர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஒரே வழி யூத இராச்சியம் ஒன்றை அமைப்பதுதான் என குறிப்பிடப்பட்டுள்ளது. பலஸ்தீனில் யூத இராச்சியம் ஏற்படுத்தப்படல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

யூதர்கள் தங்களது சமயம் தோன்றிய இடம் பலஸ்தீனம் என நம்புகின்றனர். எனவே, பலஸ்தீனத்திலே யூத இராச்சியத்தை உருவாக்க முடிவு செய்தனர். Moses அல்லது மூஸா என்கிற இறை தூதருக்கு இறைவனால் அருளப்பட்ட தவ்ராத் வேதத்தையும் பத்துக் கட்டளைகளையும் (10 commandments) அடிப்படையாகக் கொண்டு யூத சமயம் உருவானது. சமய போதனைகள் ஹிப்ரு மொழியிலேயே அமைந்திருந்தன.

பலஸ்தீனில் யூத இராச்சியம் அமைப்பதற்காக ஒஸ்திரிய யூதர் ஹெர்ஸல் துருக்கி நாட்டுக்கு சென்றார். பலஸ்தீன் துருக்கியின் ஆட்சியின் கீழ் இருந்தமையால் ஹெர்ஸல் அங்கு சென்று துருக்கி சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீதுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு மன்னர் ஒத்துவரவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த விடயங்களைப் பற்றி இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது பொருத்தமான விடயமல்ல என்று கூறி பேச்சுவார்த்தையை முறித்து விட்டார்.

முதலாவது உலகப் போரின்போது பலஸ்தீன் நாடு பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. யூதர்களுக்கு உதவ முன்வந்தது பிரிட்டிஷ். 1917 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளரான ஆதர் ஜே பல்போர் என்பவர் யூத மக்களுக்கான தாயகமொன்றை பலஸ்தீனில் அமைப்பதை அங்கீகரிக்கும் பிரகடனம் ஒன்றை கடிதம் மூலமாக பிரித்தானிய யூத தலைவருக்கு அனுப்பி வைத்தார். ஆதர் ஜே பல்போரினால் ஏற்படுத்தப்பட்ட இந்த பிரகடனம்தான் இஸ்ரேல் எனும் நாடு உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது. இந்த பிரகடனத்தின் பயனாக ஐரோப்பாவிலிருந்தும் உலகின் ஏனைய பகுதிகளிலிருந்தும் யூதர்கள் வந்து பலஸ்தீனில் குடியேறத் தொடங்கினர்.

பலஸ்தீனத்துக்கு உள்ளேயே யூதர்களின் குடியிருப்புக்கள் பெருகின. எனவே, 1920 ஆம் ஆண்டு முதன்முதலாக பலஸ்தீன மக்களுக்கும் யூதர்களுக்கும் இடையே நேரடி மோதல்கள் வெடித்தன.

பிரித்தானியரின் ஆட்சி 1948 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி முடிவுக்கு வந்தது. ஆனால், முதல் நாளே 1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் திகதி நள்ளிரவுடன் யூதர்கள் இஸ்ரேல் தனிநாடு என்ற சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டனர்.

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு_ இஸ்ரேல் யுத்தத்தைத் தொடர்ந்து பைத்துல் முகத்தஸ் இஸ்ரேலிய யூதர்களின் வசமானது. பைத்துல் முகத்தஸ் பறிபோய் 55 வருடங்கள் ஆகிவிட்டன.

யஸீர் அரபாத் ஐம்பது ஆண்டு காலத்திற்கு இடைவிடாத போராட்டங்களை நடத்தி வந்தார். இப்போது அவரது அத்தியாயமும் முடிந்து விட்டது.

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு_ இஸ்ரேல் யுத்தத்தின் போது இஸ்ரேல் அடாவடித்தனமாக பறித்தெடுத்த பலஸ்தீனர்களின் பைத்துல் முகத்தஸை ஒப்படைத்து அமைதியை உருவாக்க இஸ்ரேல் தயாராகுமா?

கலாபூஷணம்
பரீட் இக்பால்
யாழ்ப்பாணம்.


Add new comment

Or log in with...