இ.தொ.கா. முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்

- இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான முத்து சிவலிங்கம் காலமானார்.

இது தொடர்பில் அக்கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ள இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்,

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் போசகரும் முன்னாள் தலைவருமான முத்து சிவலிங்கம் காலமான செய்தி கேட்டு,மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவர் 1943.07.20 ஆம் திகதியன்று உடபுசல்லாவ ரப்பானை தோட்டத்தில் பிறந்து, ஆரம்ப கல்வியை உடபுசல்லாவ வித்தியாலயத்திலும் பின்னர் உயர் கல்வியை நுவரெலியா புனித கிறிஸ்தவ கல்லூரியிலும் பயின்றார்.
 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபாகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் கொள்கையை ஏற்று 1962 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி தலவாக்கலையில் தன்னை இ.தொ.காவுடன் இணைத்துக் கொண்டார்.
 
மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுடன் கைக்கோர்த்து இ.தொ.காவை வெற்றி பாதையில் செல்ல வழிகாட்டி உள்ளார். இந்நாட்டின் வளர்ச்சிக்காக பல அமைச்சு பதவிகளை வகித்து பாரிய சேவைகளையும் முன்னெடுத்துள்ளார். 
 
எனது அரசியல் பிரவேசத்தின் போது அவரது அனுபவங்களின் ஊடாக பல அரசியல் பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளார். அவருடைய இழப்பு இ.தொ.காவிற்கு மாத்திரமல்லாது முழு மலையகத்திற்கும் ஒரு பேரிழப்பாகும்.
 
அவருடைய இழப்பால் துயரும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான முத்து சிவலிங்கம் தனது 79ஆவது வயதில் இன்று (23) காலை காலமானார்.

1943ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் திகதி உடப்புஸ்ஸலாவை டலோஸ் தோட்டத்தில் இலக்கம் 17 தொடர் குடியிருப்பில் பிறந்த இவர், நுவரெலியாவில் தனது உத்தியோக பூர்வ இல்லத்தில் காலமானார்.

1962 முதல் அரசியலில் ஈடுபட்டு வரும் இவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் சாணக்கியம் நிறைந்த தொழிற்சங்கவாதியாவார்.

அத்துடன் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதி அமைச்சராகவும் இருந்த இவர் கடந்த எட்டாவது பாராளுமன்றத்திலும் அமைச்சராக இருந்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் மாநில பிரதிநிதியாக தொழிற்சங்க நடவடிக்கையில் காலடி எடுத்து வைத்த இவர் காங்கிரஸின் நிதி காரியதர்சியாக கடந்த 2018 ஆம் ஆண்டுவரை இருந்து தனது சுயவிருப்பத்தின் பேரில் தனது பதவியை இராஜினாமா செய்து பின் காங்கிரஸின் போசகராக தொடர்ந்தும் இருந்துள்ளார்.

சிறிது காலம் நோய்வாய்பட்டிருந்த இவர் இன்று (23) காலை உயிரிழந்ததாகவும், அமரரின் இறுதி கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

முத்து சிவலிங்கம் 1943 ஜூலை 20ஆம் திகதி உடப்புசல்லாவ டலோஸ் மேல் தோட்டத்தில் பிறந்தவர். இவர் உடப்புசல்லாவ றப்பானை தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்னர் நுவரெலியா புனித திரித்துவக் கல்லூரியிலே உயர்கல்வி பெற்றார். துடிப்பான இளைஞராக இருந்த முத்து சிவலிங்கம் 1962 மார்ச் 15ஆம் திகதி தலவாக்கலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலய எழுதுவினைஞராகப் பதவி பெற்றார். அக்காலத்தில் அவர் பெற்ற ஆரம்ப சம்பளம் ரூ. 42.50 சதம் என அவர் தெரிவித்திருந்தார். தந்தை முத்தையாவின் ஆலோசனைப்படி அவர் அரசியலில் பிரவேசித்தார்.

முதன் முறையாக நுவரெலியா மாவட்டம், மஸ்கெலிய தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு 28 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார்.

பின் 1994ஆம் ஆண்டு நுவரெலியா, மஸ்கேலிய தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 86,500 வாக்குகளைப் பெற்று அன்றைய அரசில் விவசாய பிரதி அமைச்சரானார். இவ்வாறே இவரது அரசியல் பயணம் தொடர்ந்தது.

1994 முதல் 2010 வரை இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2010 ஆம் ஆண்டு தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

முத்து சிவலிங்கம் 2015 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 45,352 விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆ. ரமேஸ்


Add new comment

Or log in with...