மறைந்த அமரகீர்த்தி அத்துகோரள குடும்பத்திற்கு ரூ. 90 இலட்சம் கையளிப்பு

- 183 எம்.பிக்களிடமிருந்து நன்கொடையாக சேகரிப்பு
- மறைந்த எம்.பிக்கு ஓய்வூதியம் வழங்கவும் நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட தொண்ணூறு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை (ரூ. 9,025,000) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின்போது கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோளவின் மனைவியிடம் நேற்று (14) கையளித்தார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தின் பின்னர் இந்த பணத்தை ஜனாதிபதி கையளித்தார்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அதற்கான காசோலையை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், ஜனாதிபதி அதனை மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மனைவி மற்றும் மகன்களிடம் வழங்கினார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 183 பேர் அதற்காக நிதியுதவி அளித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதிவெல வீடமைப்புத் தொகுதியில் உள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்த 20 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட "மாதிவெல மிதுரோ" கழகம்  மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவுக்காக இந்நிதியை சேகரிக்க ஆரம்பித்ததாகவும் அதன் பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தமை விசேட அம்சம் என்றும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இங்கு தெரிவித்தார்.

கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவிற்கு ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு பிரதி சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மாத்தறை மாவட்ட முன்னாள் அமைச்சர் கீர்த்தி அபேவிக்ரம எம்.பிக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதனால் அத்துகோரளவின் குடும்பத்திற்கும் அவரது ஓய்வூதியத்தை பெற்றுக் கொடுக்க முடியுமென்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...