சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் செயற்படும் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியம்

- சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் அவதானம்

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் செயற்படும் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பில் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் கவனம் செலுத்தியது.

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜயரத்ன தலைமையில் அண்மையில் (08) கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் செயற்படும் பல்வேறு நிறுவனங்களுக்கு காணப்படும் சவால்கள் மற்றும் சிக்கல்களை இனங்கண்டு சம்பந்தப்பட்ட தரப்பினரை அணுகி அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதும் சம்பந்தப்பட்ட நிறுவங்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுவதை உறுதிப்படுத்தும்  நோக்கிலும் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய, பெண்கள், குழந்தைகள் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் ஆகிய நிறுவங்களின் பணிகள் மற்றும் அவற்றை செயற்படுத்தும் போது எழும் சவால்கள் மற்றும் சிக்கல்கள் தொடர்பில் முன்வைப்புகள் இதன்போது மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் (UNICEF) இலங்கையில் மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பிலும் இங்கு முன்வைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த நிறுவங்களின் காணப்படும் ஊழியர் வெற்றிடங்கள், கட்டட தேவை, வாகனத் தேவைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் குறைபாடுகள், தொடர்பில் வருகை தந்த அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தனர். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 618 பதவிகளில் 284 பதவிகள் வெற்றிடமாக காணப்படுகின்றமை இங்கு புலப்பட்டதுடன், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்து வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள், குழந்தைகள் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளருக்கு ஒன்றியம் அறிவுறுத்தல் வழங்கியது.

இந்நாட்டிலுள்ள சிறுவர்களுக்கு தரமான கல்வியைப் வழங்குதல், உரிய சுகாதாரப் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுத்தல், தற்பொழுது காணப்படும் வளங்கள் மற்றும் அதிகாரிகளின் திறன்களை அதிகரித்தல், சமுதாயஞ்சார்  சீர்திருத்தம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் ஊடகங்களில் அறிக்கையிடும் போது கருத்தில்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இங்கு முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரை ஒன்றியத்தின் முன்னிலையில் அழைத்து தீர்வுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜயரத்ன இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, முன் பிள்ளைப்பருவ கல்வி தொடர்பான தேசிய கொக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இங்கு புலப்பட்டதுடன், மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் காணப்படும் வேறுபாடுகள் மற்றும் ஒருமைப்பாடுகளை கருத்தில் கொண்டு முன் பிள்ளைப்பருவ கல்வியை முறைமைப்படுத்துவதன் அவசியத்தை பூர்த்திசெய்யும் நோக்கில் சட்டக்கட்டமைப்பொன்றில் செயற்படும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், 2019 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையை செயற்படுத்துவதற்கான 5 ஆண்டு கால செயற்பாட்டுத் திட்டம் (2023 - 2027) தயாரிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் இதன்போது குறிப்பிடப்பட்டது.

இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் இணை உப தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே மற்றும் வேலு குமார், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க மற்றும் டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரள, சந்திம வீரக்கொடி, ஜே.சி. அலவதுவல, அசோக் அபேசிங்க, மயந்த திசாநாயக்க, ரஜிகா விக்ரமசிங்க, வீரசுமன வீரசிங்க, பாராளுமன்ற உதவிச் செயளாலர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ மற்றும் முதிதா பிரிஸான்தி ஆகியோர் ஒன்றியத்தின் தலைவரின் அனுமதியுடன் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...