இந்திய ரூ. 200 கோடி மோசடி வழக்கு; நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு பிணை நீடிப்பு

மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் நடித்து, தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் என்பவர் இந்திய ரூ. 200 கோடி கப்பம் பெற்ற வழக்கில், இலங்கையைச் சேர்ந்த பிரபல இந்தி நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் குற்றச்சாட்டு இருந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து இந்திய காவல்துறையினர் விசாரணையும் மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து, கைது நடவடிக்கையில் தப்பிக்கவேண்டும் என்பதற்காக, தனக்கு இடைக்கால ஜாமினை வழங்குமாறு நடிகை ஜாக்குலின் தரப்பில் டில்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த குறித்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்திய ரூ. 50 ஆயிரம் பிணை தொகை செலுத்த உத்தரவிட்டு, இடைக்கால ஜாமீனை இன்று (15) வரை நீடித்து, மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிடுவதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ரூ 200 கோடி பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் இன்று (15) மீண்டும் பிணை வழங்கியுள்ளது. 

இன்று வரை இடைக்கால பிணை வழங்கிய நிலையில், மீண்டும் அவருக்கு பிணை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...