பட்ஜட் 2023: பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

- நாளை முழு பாராளுமன்றமும் சோதனைக்குட்படுத்தப்படும்

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி திங்கட்கிழமை நிதி அமைச்சரினால் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை முன்வைக்கப்படவிருப்பதை முன்னிட்டு கடந்த வருடங்களைப் போன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (10) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கமைய, உறுப்பினர்களின் ஓய்வறைகள், ஆடை அலுமாரிகள் உட்பட பாராளுமன்றத்தின் முழு கட்டடமும்  நாளையதினம் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.

வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் 14ஆம் திகதி பொதுமக்கள் கலரி வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். பாராளுமன்ற வாகனத் தரிப்பிடம் அன்றையதினம் மூடப்பட்டிருப்பதுடன், உறுப்பினர்கள் வருகை தரும் வாகனங்கள் உரிய தரிப்பிடத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன. அன்றையதினம் பாராளுமன்றத்துக்கு வருகைதரும் உறுப்பினர்கள் முடிந்தளவு தமது சாரதிகளுடன் வருமாறு சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வாகனத்தை தாமே செலுத்திவந்தால் அவ்வாகனங்களை வாகனத் தரிப்பிடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு உறுப்பினர்களின் நுழைவாயிலுக்கு அருகில் பாராளுமன்ற பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் சபாநாயகர் தனது அறிவிப்பில் தெரிவித்தார்.

அத்துடன், அன்றையதினம் போக்குவரத்துப் பொலிஸார் மற்றும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள். மேலே குறிப்பிடப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.


Add new comment

Or log in with...