யால சரணாலயத்தில் அநாகரிகமாக நடந்த 9 பேருக்கு பிணை

யால தேசிய சரணாலயத்தில் முறையற்ற வகையில் வாகனங்களை செலுத்திய சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 9 சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் யால சரணாலயத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் 9 பேர் தமது 6 சபாரி ஜீப் வண்டிகளுடன் வனஜீவராசிகள் திணைக்களத்தில் சரணடைந்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, குறித்த நபர்கள் அவர்களது வாகனங்களுடன் இன்றையதினம் (26) திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தலா ரூ. 5 இலட்சம் கொண்ட சரீரப்பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, விவசாயம் மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் கலந்துரையாடி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் மூவரடங்கிய குழுவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, வனஜீவராசிகள், வன வள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திரா ஹேரத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் கடமை தவறியமை மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காதது குறித்தும் இந்த மூவர் குழு விசாரணை செய்யவுள்ளது.

உணர்வு மிக்க சுற்றாடல் வலயமான யால தேசிய பூங்காவில், கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை சொகுசு சபாரி ஜீப் மற்றும் கெப் வண்டிகளில் வந்த குறித்த குழுவினர் வன விலங்குகளுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் அநாகரீகமாக நடந்து கொண்டிருந்ததை தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவியிருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் மற்றும் வனவள அமைச்சர் வழங்கிய பணிப்புரைக்கு அமைய, பூங்காவிற்குள் பிரவேசித்த குறித்த வாகனங்களுக்கு 3 வருடங்களுக்கு நாட்டில் உள்ள எந்தவொரு தேசிய பூங்காவிற்கும் பிரவேசிக்க முடியாதவாறு கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்திருந்தார்.

இதேவேளை, குறித்த நபர்களுடன் பயணித்த 7 வழிகாட்டிகள் மற்றும் அங்கு கடமையிலிருந்து அதிகாரிகளின் பணியை உரிய விசாரணைகள் முடியும் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...