கூரை மீதான சூரிய மின்கல மின்னுற்பத்திக்கு செலுத்தும் கட்டணம் திருத்தம்

- டொலர் அனுப்பும் தொழிலாளர்களுக்கு வாகனம்
- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 8 முக்கிய தீர்மானங்கள்

கூரை மீது நிர்மாணிக்கப்படும் சூரியமின்கல மின்னுற்பத்தி முறை மூலம் தற்போது கிட்டத்தட்ட 580 மெகாவாற்று மின்சாரம் தேசிய மின்வலுக் கட்டமைப்புக்கு இணைக்கப்பட்டுள்ளதுடன், மின்சார சபையால் தயாரிக்கப்பட்டுள்ள நீண்டகால மின்னுற்பத்தி விரிவாக்க திட்டத்திற்கமைய, மேலும் 1,800 மெகாவாற்று வலுக்கொண்ட மின்சாரத்தை இதன்மூலம் விநியோகிக்க வேண்டிய தேவை கண்டறிப்பட்டுள்ளது.

அதற்கான ஊக்குவிப்பாக தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள சூரியமின்கல மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து கொள்வனவு செய்யும் மின்சாரக் கட்டணத்தைத் திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் பரிந்துரையின் பிரகாரம் கட்டணத் திருத்தம் செய்வதற்காக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமான முறையில் பணஅனுப்பீடுகளை மேற்கொள்வதற்கு ஊக்குவித்தல்
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமான முறையில் பண அனுப்பல்களை ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சலுகைகளுக்கு 2022.08.08 திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் குறித்த சுற்றறிக்கை ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், தகைமை பெறுகின்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உயர்ந்தபட்சம் 25,000 அமெரிக்க டொலர்களுக்கு உட்பட்டு இரண்டு சக்கர இலத்திரனியல் வாகனமொன்றும், உயர்ந்தபட்சம் 65,000 அமெரிக்க டொலர்கள் உட்பட்டு நான்கு சக்கர முழு அளவிலான இலத்திரனியல் வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள, புலம்பெயர் தொழிலாளர்களால் வெளிநாட்டில் வருமானமாக ஈட்டும் வெளிநாட்டு செலாவணியை இலங்கைக்கு அனுப்புவதை மேலும் ஊக்குவிப்பதற்காக கீழ்க்காணும் நடவடிக்கைகளுக்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது :

  • 2023.04.30 ஆம் திகதி வரை வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்காக விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்கும் திகதி வரைக்கும் அனுப்பப்படுகின்ற வெளிநாட்டு செலாவணியின் பெறுமதி 50% வீதம் வரை CIF  பெறுமதியுடன் கூடிய இரண்டு சக்கர இலத்திரனியல் வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்கல்
  • 2022.05.01 ஆம் திகதி தொடக்கம் 2023.12.31 ஆம் திகதி வரை எமது நாட்டுக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு செலாவணிப் பெறுமதி 50% வீதம் வரைக்கும் CIF பெறுமதியுடன் கூடிய நான்கு சக்கர முழு அளவிலான இலத்திரனியல் வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்கல்

2. தேசிய விநியோகச் சங்கிலி தினம் (National Supply Chain Day) பிரகடனப்படுத்தல்
மூலப்பொருட்களை முடிவுப் பொருட்களாக மாற்றுகின்ற முழுமையான செயன்முறையானது விநியோகச் சங்கிலி முகாமைத்துவமென அழைக்கப்படுவதுடன், அதன்மூலம் நுகர்வோர் பெறுமதியை அதிகபட்சம் உயர்த்துவதற்கு மற்றும் சந்தைப் போட்டித்தன்மையின் நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வணிகமொன்றின் விநியோகப் பிரிவுச் செயற்பாடுகளை முனைப்பாகவும் முறைசார்ந்த வகையிலும் மேற்கொள்ள முடியும்.

விநியோகச் சங்கிலியை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவம் பற்றி உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் தேசிய விநியோகச் சங்கிலி தினமொன்றை பிரகடனப்படுத்துவதன் தேவையை விநியோகம் மற்றும் மூலப்பொருட்கள் முகாமைத்துவ நிறுவனம் (National Supply Chain Day)  சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய, ஒவ்வொரு ஆண்டும் ஒக்ரோபர் மாதம் 24 ஆம் திகதி 'தேசிய விநியோகச் சங்கிலி தினம்' ஆக பிரகடனப்படுத்துவதற்காக கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பல் போக்குவரத்து முகவர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கல் சட்டத்தை திருத்தம் செய்தல்
1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பல் போக்குவரத்து முகவர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கல் சட்டத்தின் 3 ஆம் மற்றும் 10 ஆம் உறுப்புரைகளின் ஏற்பாடுகளுக்கமைய, 2005 ஆம் ஆண்டில் கொள்கலன்கள் இயக்குநர்களுக்கான ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தால் குறித்த சட்டத்தின் 10 ஆம் ஒழுங்குவிதி திருத்தம் செய்யப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த ஏற்பாடுகளை உள்ளடக்கி 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பல் போக்குவரத்து முகவர்களுக்கான அனுமதிப்பத்திர சட்டத்திற்கு தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக 2022.07.04 திகதி அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்காக சட்டமா அதிபரின் ஒப்பதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றில் சமர்;ப்பிப்பதற்கும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை திருத்தம் (XXX ஆம் அத்தியாயம் - உடற்கூற்றுப் பரிசோதனை)
உடற்கூற்றுப் பரிசோதனை நடாத்துதல் தொடர்பாக தற்போது காணப்படும் சட்டம், நடவடிக்கைமுறை மற்றும் பிரயோகங்கள் தொடர்பாகப் பொருத்தமான திருத்தங்களை அடையாளங்கண்டு பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பேராசிரியர் ரவீந்திர பர்னாந்து அவர்களின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை உட்சேர்ப்பதற்காக குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையை திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையை திருத்தம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

6. மத்தியஸ்தம் தொடர்பான சிங்கப்பூர் சமவாய (Singapore Convention on Mediation) சட்டமூலம் 
மத்தியஸ்தத்தின் மூலம் ஏற்படுகின்ற சர்வதேச இணக்கத்தீர்வு உடன்படிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயம் எனும் 'மத்தியஸ்தம் தொடர்பான சிங்கப்பூர் சமவாயம்' ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் 2018.12.20 ஆம் திகதி உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குறித்த ஒப்பந்தத்தில் 2019.08.07 ஆம் திகதி கையொப்பமிட்டுள்ளதுடன், அதனை இலங்கையில் ஏற்று அங்கீகரித்து நடைமுறைப்படுத்துவதற்காக உள்ளூரில் சட்டம் வகுக்கப்பட வேண்டியுள்ளது.

அதற்கமைய, குறித்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு, பொருத்தமான சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. தேசிய பண அனுப்பீடு மற்றும் விநியோக வலையமைப்பு அபிவிருத்தி மற்றும் வினைத்திறன் மேம்பாட்டு கருத்திட்டத்திற்குப் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்தொகையின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்
இக்கருத்திட்டத்திற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தால் 24,930 மில்லியன் யென் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் 2015.08.11 திகதி கையொப்பமிடப்பட்டுள்ளது. குறித்த கடன்தொகையின் செல்லுபடியாகும் காலம் 2022.10.28 திகதி முடிவடையவுள்ளது.

நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலை காரணமாக கருத்திட்டத்தை திட்டமிட்ட வகையில் நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளமையால், குறித்த கடன்தொகையின் செல்லுபடியாகும் காலப்பகுதி நீடிக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, குறித்த கடன்தொகையின் செல்லுபடியாகும் காலத்தை 2026.04.28 வரைக்கும் நீடிப்புச் செய்வதற்காக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. இலங்கை மற்றும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம்
இலங்கை மற்றும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையில் இராஜதந்திரத் தொடர்புகள் 1951 ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விமான சேவைகள் ஒப்பந்தத்தை மேற்கொள்வதன் மூலம் இரு நாடுகளுக்கிடையில் நேரடியான பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குகள் விமானப் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு வசதிகள் உருவாகும். அதன் மூலம், இரு நாடுகளுக்கிடையில் சுற்றுலா, கல்வி, வணிகம், முதலீடுகள், விவசாயம் மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் மேலும் விருத்தியடையும்.

அதற்கமைய, இரு நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்பட்டுள்ள விடயங்களுக்கமைய இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 


Add new comment

Or log in with...