தாய்லாந்து சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

22 சிறுவர்கள் உட்பட 34 பேர் பலி

தாய்லாந்து வடகிழக்கு மாகாணத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றின் மீது நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்ட தாக்குதலில் 34 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரே சூடு நடத்தியுள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தையை கொன்ற அந்த நபர் பின்னர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் 22 சிறுவர்கள் உள்ளனர். சந்தேகிக்கப்படும் தாக்குதல்தாரி போதைப் பொருள் தொடர்பான காரணத்தால் கடந்த ஆண்டு பொலிஸ் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டவர் என்று மாவட்ட பொலிஸ் அதிகாரி சக்ரபத் விச்சிட்வைத்தியா தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிதாரி கத்தியால் தாக்குதல் நடத்துவதையும் பார்த்ததாக சம்பவத்தை கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிதாரி சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு வரும்போது கடும் மழை காரணமாக அங்கு வழக்கத்தை விடவும் குறைவாக சுமார் 30 சிறுவர்களே இருந்துள்ளனர்.

“பகல் உணவு வேளையில் வந்த துப்பாக்கிதாரி முதலில் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருக்கும் நான்கு அல்லது ஐந்து அதிகாரிகளை சுட்டுக் கொன்றார். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் எட்டு மாத கர்ப்பிணியான ஆசிரியர் ஒருவரும் இருந்தார்” என்று அருகில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றும் ஜிடாபா பூன்சன் தெரிவித்துள்ளார்.

பின்னர் சிறுவர்கள் உறங்கிக்கொண்டிருந்த அறை ஒன்றுக்குள் நுழைந்த துப்பாக்கிதாரி சிறுவர்கள் மீது கத்தியால் தாக்குதல் நடத்தினார் என்றும் அவர் விபரித்தார்.

சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு வந்த துப்பாக்கிதாரி அங்கு தனது குழந்தை இல்லாததைக் கண்டு கோபம் அடைந்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய அவர் பாதசாரிகள் மீது வாகனத்தை மோதவிட்டு பின்னர் வீட்டுக்குத் திரும்பி மனைவி மற்றும் குழந்தையை கொன்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

உதை சவான் என்ற நகரில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இரத்த வெள்ளத்திற்கு மத்தியில் காகிதத்தாள்களால் மூடப்பட்டு வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் படங்கள் சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளன.


Add new comment

Or log in with...