'ரக்பி 7' தொடர் நாளை ஆரம்பம்

இலங்கை ரக்பி கூட்டமைப்பால் நடத்தப்படும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ரக்பி 7 தொடர் நாளை (8) மற்றும் நாளை மறுதினம் (9) கொழும்பு குதிரைப்பந்தய திடல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் முதல்முறை விளையாட்டுக் கழகங்கள், மாகாண அணிகள் மற்றும் முப்படை அணிகள் ஒரு போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளன.

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இடம்பெறும் இந்த எழுவர் ரக்பி 26 அணிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி தொடர்பாக விளக்கம் அளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு ரமாடா ஹோட்டலில் கடந்த புதன்கிழமை (05) இடம்பெற்றது.

இதில் இலங்கை ரக்பி கூட்டமைப்பின் தலைவர் ரிஸ்லி இல்யாஸுடன் நிறைவேற்றுக் குழுவினர் பங்கேற்றதோடு போட்டிக்கான அனுசரணைகளையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தப் போட்டிகளுக்கு நிப்போன் பெயின்ட் நிறுவனம் பிரதான அனுசரணை வழங்குவதோடு மேலும் பல நிறுவனங்களும் அனுசரணை வழங்க முன்வந்துள்ளன.

போட்டியின் சிறந்த வீரர் மற்றும் விராங்கனைக்கு மாலைதீவு மற்றும் துருக்கி அல்லது ஜோர்ஜியாவுக்கு சுற்றுலா பயணம் ஒன்றை வெல்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு துருக்கி விமானசேவை நிறுவனம் அனுசரணை வழங்குகிறது. மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இம்முறை தொடரில் முன்னணி கழகங்களுக்கு இடையிலான போட்டி மற்றும் எட்டு மாகாண அணிகளைக் கொண்ட அழைப்பு அணிகள் உள்ளடக்கிய நான்கு பிரிவுகளாக போட்டிகள் இடம்பெறுகின்றன.


Add new comment

Or log in with...