இன்று முதல் மீண்டும் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுகிறது

- போதிய டொலர் கையிருப்பு இல்லாமையே காரணம்
- 10 நாட்களாக 100,000 மெ.தொன் கப்பல் காத்திருப்பு
- போதிய எண்ணெய் வகைகள் கையிருப்பில்

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று (07) முதல் மூடப்படுவதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை விடுத்துள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெயை கொள்வனவு செய்வதற்கான அந்நியச் செலாவணி கிடைக்காமையால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

ஆயினும் போதுமான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் கையிருப்பில் உள்ளதால் அதற்கான தட்டுப்பாடு நாட்டில் நிலவாது என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

சுத்திகரிப்பு உற்பத்திகளுக்கான வாராந்த அந்நியச் செலாவணி தேவைகளை இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ளதாகவும் ஆயினும், சுத்திகரிப்பு நிலையத்திற்காக ஏற்கனவே கொள்வனவு செய்து பயன்படுத்தப்பட்ட 2 யூரல் கச்சா எண்ணெய்களுக்கு செலுத்துவதற்கான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் சுத்திகரிப்பு நிலையத்தை மூட நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு போதிய அந்நியச் செலாவணி கிடைத்தவுடன், கடந்த 10 நாட்களாக இலங்கை கடலில் தரித்துள்ள கப்பலிலிருந்து 100,000 மெ.தொன் ESPO கச்சா எண்ணெயை இறக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் கஞ்சன சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சா எண்ணெய் மூலப்பொருள் மூலம் டீசல், ஒக்டேன் 92 பெற்றோல், மண்ணெணெண்ணெய், தொழிற்சாலைகளுக்கான எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வகைகள், எரிவாயு உள்ளிட்டவற்றை சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பிரித்தெடுக்கின்றது.

ஆயினும் சுப்பர் டீசல், ஒக்டேன் 95 பெற்றோல் உள்ளிட்ட உயர் வகை எரிபொருள் வகைகளை சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பிரித்தெடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Add new comment

Or log in with...